Saturday, June 24, 2017

எம்.எஸ்விக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது?


ஆசை

('தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் 17-07-2015 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம்.)


மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிடும் வெகுசிலரில் விஜயகாந்தும் ஒருவர். அதனாலேயே கிண்டலுக்கும் உள்ளாகுபவர் அவர். எம்.எஸ்.வி.யின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த விஜயகாந்த்‘எனக்கு இரங்கல் தெரிவிக்க மனம் வரவில்லை’ என்றார். பெரும்பாலானோரின் உணர்வும் அதுதான். நம்முடன் எப்போதும் இருப்பவர் இவர் என்ற உணர்வு ஒருசிலரிடம் மட்டும்தான் ஏற்படும்; அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.எஸ்.வி. அவருடைய இறப்பைப் பற்றிச் சொல்லப்போனால் நம் கிராமத்து வழக்கில்தான் சொல்ல வேண்டும்: ‘கல்யாணச் சாவு’. ஆம். அது ஒரு ‘கல்யாணச் சாவு’தான். இப்படிப்பட்ட மரணங்களின்போது ஒரு பெருவாழ்வு நினைவுகூரப்பட்டு ‘ஆகா, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்’ என்ற பெருமகிழ்ச்சிதான் நம்மிடம் வெளிப்படும். எம்.எஸ்.வி காலமானதைக் கேள்விப்பட்டுப் பலரும் துயரத்தில் ஆழ்ந்துபோய் அவருடைய பாடல்களைக் கேட்க ஆரம்பித்துக் கடைசியில் சந்தோஷ உணர்வை, பரவச உணர்வை அடைந்ததுதான் நிஜம். தன் வாழ்வால் எல்லோருடைய வாழ்வையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியவர் எம்.எஸ்.வி. அப்படிப்பட்டவரின் மரணம் உண்மையில் கல்யாணச் சாவாகத்தானே இருக்க முடியும்!

யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரிகிறது. நாம் கண்ணதாசனைக் கொண்டாடியிருக்கிறோம், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றோரைக் கொண்டாடியிருக்கிறோம். ஆனால், எம்.எஸ்.வி.யை அந்த அளவுக்குக் கொண்டாடவில்லை.இன்னும் சொல்லப்போனால் எம்.எஸ்.வி. இசையமைத்த எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களைகூட எம்.எஸ்.வி-யின் பாடல்களாகக் கருதாமல் எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களாகக் கருதிதான் அவற்றைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தனது கலையின் பின்னால் எம்.எஸ்.வி., தன்னை மிகவும் மறைத்துக்கொண்டதால்தான் நாம் எம்.எஸ்.வியின் பாடல்களில் கண்ணதாசன், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரைக் காண்கிறோமேயொழிய எம்.எஸ்.வியைக் காண்பதில்லை. ‘ஆகா, கண்ணதாசன் என்னமா எழுதியிருக்கிறான்!’, ‘ஆகா, என்ன ஒரு தேன் குரல் ஸ்ரீனிவாசுக்கு!’ என்றெல்லாம் புளகாங்கிதம் அடையும் நாம் பெரும்பாலும் ‘ஆகா,எம்.எஸ்.வி. எப்படி இசையமைத்திருக்கிறார்!’ என்று ஆச்சரியப்படுவதில்லை.

ஆக, கண்ணதாசனின் அற்புதமான வரிகள், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் ஈடிணையற்ற குரல்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோரின் உத்வேகம், சோகம் போன்ற எல்லாவற்றுக்கும் பின்னால் நின்று களம் அமைத்துக்கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தியதுதான் எம்.எஸ்.வியின் இசை. ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்று எம்.ஜி.ஆர். நீதியின் சாட்டையை வீசும்போது நாம் எம்.எஸ்.வியையா நினைத்துப்பார்க்கிறோம்? எம்.ஜி.ஆரைத்தானே நினைத்துப் புல்லரிக்கிறோம். எம்.ஜி.ஆரை நீதியின் உருவமாக, நியாயத்தின் சின்னமாகத் தூக்கிப்பிடிப்பதில் இன்றுவரை முக்கியப் பங்காற்றிவருகிறது அந்தப் பாடல். எம்.ஜி.ஆர். ரசிகரல்லாதவரும் அந்தப் பாடலால் உந்தப்படுவார். ‘நான் ஆணையிட்டால்’ என்ற டி.எம்.எஸ்ஸின் குரலைப் பின்தொடரும் ஏற்றமிகு கொம்பு சத்தம்தான் தமிழ் வாழ்வில் எம்.ஜி.ஆரின் இடம் எது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கட்டியம் கூறியது.

இரட்டை இசையமைப்பாளர்கள்
எம்.எஸ்.வி-யைப் பற்றிப் பேசும்போது அங்கே கண்ணதாசன் இருப்பார். கண்ணதாசனைப் பற்றிப் பேசும்போது அங்கே எம்.எஸ்.வி. இருப்பார். தமிழ்த் திரையிசையின் பிரிக்க முடியாத ஒரு பந்தம் அது! கண்ணதாசன் இப்படி எழுதியிருக்கிறார் என்றால் அவருடைய உள்ளார்ந்த திறமை அது என்பதுடன் அந்த மெட்டுகளுக்கு வேறு எப்படித்தான் எழுதுவதாம்?! ‘இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்’ என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். அதிலும் ‘மன்றம்’ என்ற சொல்லின் பயன்பாடு அற்புதமாக இருக்கும். சாதாரணமாகச் சொல்லும்போது கவித்துவமற்ற, பண்டிதத்தன்மை கொண்ட ஒரு சொல் அது. ஆனால், எம்.எஸ்.வியின் மெட்டுக்குள் நுழையும்போது அது எளிமையான, அழகான சொல்லாக மாறிவிடுகிறது. இவ்வளவு எளிமையான சொற்கள், அதிக கனமில்லாத சொற்கள், அழகான சொற்கள் எப்படி இவ்வளவு இயல்பாகப் பொருந்தி, ஓடிவருகின்றன என்ற வியப்பு ஏற்படும். யோசித்துப்பார்த்தால் ஒரு உண்மை தெரியும். அந்த மெட்டின் இயல்பே அதுதான். வேறு எப்படியும் எழுதிவிட முடியாது. இது கண்ணதாசனைக் குறைத்துச் சொல்வதில்லை. கண்ணதாசனிடம் அற்புதமான வரிகளை வாங்கும் வித்தை எம்.எஸ்.வியின் மெட்டுக்குத் தெரிந்திருக்கிறது; எம்.எஸ்.வியின் அற்புதமான மெட்டுக்குள் எப்படிப் பாய்வதென்று கண்ணதாசனின் வரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட பரஸ்பர உறவு அது. அதில் எம்.எஸ்.வியையும் கண்ணதாசனையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ‘கண்ணதாசா, கண்ணதாசா’ என்று எப்போதும் எம்.எஸ்.வி. புலம்பிக்கொண்டிருந்ததன் காரணத்தை இதையெல்லாம் வைத்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்பட இசையைப் பொறுத்தவரை பிரதானமானவர்களாக இசையமைப்பாளர்களையும், அவர்களைச் சார்ந்திருக்கும் இரண்டாம் நிலையினராகப் பாடலாசிரியர்களையும் கருதுவதுதான் வழக்கம். ஆனால்,இங்கு ஒரு இசையமைப்பாளர் காலம் முழுவதும் ஒரு பாடலாசிரியரைப் பிரதானப்படுத்தியபடி அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்கிறாரே, என்ன உறவு அது, என்ன மனிதர் எம்.எஸ்.வி!
அதனால்தான், கண்ணதாசனின் மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து எம்.எஸ்.வியும் அவரது இசையும் பெரும்பாலும் மீளவே இல்லை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி மட்டுமல்ல, விஸ்வநாதன்–கண்ணதாசனும் இரட்டை இசையமைப்பாளர்கள்தான்.தமிழர்களின் ரத்தத்தில் மயக்கத்தை, உத்வேகத்தை, காதலை, துயரத்தை ஏற்றத் தெரிந்த இரட்டை இசையமைப்பாளர்கள் அவர்கள்.

எத்தனையெத்தனை பாடல்கள்! ‘பாவாடை தாவணியில்’ (நிச்சயத் தாம்பூலம்) என்று அடங்கிய குரலில் டி.எம்.எஸ். ஆரம்பிக்கும்போது அந்த வரிகள் இல்லையென்றாலும் நம் மனம் நம்முடைய அத்தை மகளின் ‘பாவாடை தாவணி’ தோற்றத்தை நாடியிருக்கும். அப்படிப்பட்ட கிறக்கமான மெட்டு அது. மெட்டிலும் இசையிலும் வரிகளிலும் குரலிலும் பனி படர்ந்த பாடல் அது. ‘எங்கே என் காலமெல்லாம் முடிந்த பின்னாலும்’ என்ற வரிகள் ஆரம்பிக்கும்போது அந்தப் பனித் திரை விலகி யதார்த்தத்தை நோக்கிப் பாடல் அழைத்துச்செல்கிறது. முதுமை, மரணம் ஆகியவற்றிலிருந்து மீட்கும் வல்லமை காதலுக்கு இருக்கிறது என்பதை இறுதியில் உணர்த்திவிடுகிறது. இந்த மாயாஜாலத்தில் நாம் எப்படி கண்ணதாசனையும் எம்.எஸ்.வியையும் பிரித்துப் பார்ப்பது?

 ‘யார் அந்த நிலவு’ ( பாடல் விசித்திரமான ஒரு உணர்வைக் கொடுக்கும் பாடல். அந்தப் படத்தைப் பார்க்காதவர்களுக்கு அந்தப் பாடல் மௌனியின் கதையைப் படிப்பதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்தும். தூரத்தில் ஒலிக்கும் ஒரு பாடலைப் போல அந்தப் பாடலை உருவாக்கியிருப்பார் எம்.எஸ்.வி., அப்படியே பாடியிருப்பார் டி.எம்.எஸ்., அப்படியே எழுதியிருப்பார் கண்ணதாசன். ‘யார் அவள், எனக்கும் அவளுக்கும் என்ன உறவு, இது கனவா நனவா’ என்ற இனம்புரியாத எண்ணங்களுக்கு உணர்வை ஊட்டி புகைமூட்டமான வரிகளாக எழுதியிருப்பார் கண்ணதாசன்:
‘யார் அந்தநிலவு?
ஏன் இந்தக்கனவு?
யாரோ சொல்லயாரோ என்று
யாரோ வந்தஉறவு’

இப்படி அவர்களுடைய உறவால் விளைந்த பாடல்கள் ஏராளம். அவர்களுடைய உறவு நம் வாழ்க்கையின் அனைத்து தருணங்களுக்குமான பாடல்களை உருவாக்கியிருக்கிறது. காதலி/காதலன் பிரிவில் தவிக்கும் ஒருவருக்கு ‘நினைக்கத் தெரிந்த மனமே’ போன்று ஆறுதல் தருவது ஏது? ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’என்ற பாடல் போல் உழைப்பாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் பாடல்கள் மிகவும் குறைவு. இன்றும் மணப்பெண்களைக் கிண்டல் செய்ய ‘வாராயோ தோழி’ பயன்படுகிறது. அதே போல் அண்ணன்-தங்கை பாசத்தைக் கிண்டல் செய்ய ‘மலர்ந்தும் மலராத’ பாடல்.
எம்.எஸ்.வியின் மறைவையொட்டி செய்யப்பட்ட அஞ்சலி ஒன்றில் இப்படி எழுதப்பட்டிருந்தது: ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடல் ஒரு மனிதரைத் தற்கொலையிலிருந்து தடுத்துக்கொண்டிருக்கும் வரை, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல் இன்னும் இன்னும் காதல் கதைகளைப் பூக்கச்செய்யும்வரை எம்.எஸ்.வி வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்’ (இந்தியா டுடே இணையதளத்தில் கவிதா முரளிதரன் எழுதிய அஞ்சலி). இந்த வரிகள் எம்.எஸ்.வி., கண்ணதாசன் இருவருக்கும் பொருந்துகின்றன என்பதைப் பார்க்கும்போது நாம் இவ்வளவு காலம் கண்ணதாசனைக் கொண்டாடியதில் மறைமுகமாக எம்.எஸ்.வியையும் கொண்டாடியிருக்கிறோம் என்ற உண்மை நமக்குப் புரிபடும்.

கண்ணதாசன், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் மட்டுமல்ல நான், நீங்கள் என்று அனைவரும் சேர்ந்த மொத்தம்தான் எம்.எஸ்.வி. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் நாம் வாழும் காலத்துக்கே பின்னணி இசை கொடுத்த அந்த மகத்தான கலைஞனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது அபத்தமான விஷயமாக விஜயகாந்துக்குத் தோன்றியதில் ஆச்சரியமே இல்லை.

 -நன்றி: ‘தி இந்து’

 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: எம்.எஸ்விக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது?

கண்ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்ஆசை

(கண்ணதாசன் பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ நாளிதழில் (24-06-2014) வெளியான கட்டுரை)

அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்னையில் ஒருநாள் காலையில் பெட்டிக்கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். எதிர்ப்புறச் சாலையோரத்தில் மஞ்சள் கொன்றையொன்று தகதகக்கும் மலர்களோடு நின்றுகொண்டிருந்தது. எட்டு மணி வாக்கில் சூடில்லாத வெயிலில் மஞ்சள் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு பாடலின் வரிகள் சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தன: ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்'

எத்தனையோ முறை நான் கேட்ட பாடல் அது. அழகான சொற்களைக் கொண்டு நிரப்பப்பட்ட பாடல் அது என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்று அந்த மஞ்சள் கொன்றை அந்தப் பாடலை எனக்குத் திறந்து காட்டியது. அந்த மஞ்சள் கொன்றையின் மலர்கள்தான் வசந்த காலத்தின் வைரமணி நீரலைகள் என்று எனக்குத் தோன்றியது. மனம் எவ்வளவு விசித்திரமானது. தனது நினைவறையில் எல்லாவற்றையும் கொட்டிவைத்து, சம்பந்தமில்லாததுபோல் தோன்றும் இரு விஷயங் களுக்குள்ளும் உறவு இருக்கிறது என்பதை ஏதோ ஒரு தருணத்தில் திடீரென்று உணர்த்திவிடுகிறது. மஞ்சள் கொன்றை அந்தப் பாடலைத் திறக்க, அந்தப் பாடல் எனக்கு வசந்த காலத்தைத் திறந்தது. நிழற்சாலை ஒன்றின் நடைபாதையில் பரவசத்துடன் நடக்க ஆரம்பித்தேன். கொய்யா, மாம்பழம், நாவற்பழம், சப்போட்டா, சீத்தாப்பழம் என்று வசந்தத்தின் வெவ் வேறு வண்ணங்கள் அந்த நடைபாதையில் போகும் வழியெல்லாம் தள்ளுவண்டிகளில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன. வசந்தம் இன்னும் விரிந்து கொண்டே போனது. அன்று, வசந்தத்துக்கு என் கண்களைத் திறக்கச் செய்தார் கண்ணதாசன்.

காதுகளின் கவிஞன்
கண்ணதாசன் பாடல்களில் இசையையும் தருணங்களையும் அகற்றிவிட்டு வெறும் வரிகளாக வாசிக்கும் விமர்சகர்களுக்குப் பலமுறை அவரது வரிகள் ஏமாற்றம் தரலாம். ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. கண்ணதாசன் கண்களின் கவிஞன் அல்ல; செவியின் கவிஞன். கவிதைகள் காலம்காலமாகச் செவிக்கு உரியவையாகத்தான் இருந்திருக்கின்றன. செவிநுகர் கனிகள் என்று கம்பன் சொல்லியது கவிதைகளுக்குத்தான் முற்றிலும் பொருந்தும். நீரில் நீலம் பிரியும் மைத்துளி போல செவியில் விழும் சொற்கள் மனதுக்குள் விரியும். எழுத்து, அச்சு என்பவையெல்லாம் அந்தச் சொற்களின் ஆவணக்காப்பகங்கள் போன்றுதான்.
தற்போது கவிதைகள் தமக்குரிய இசைத் தன்மையை விட்டுப் பார்வையை நோக்கித் திரும்பி விட்டன. கவிதைகள் காட்சிகளையே பெரிதும் தற்போது உருவாக்குகின்றன. கண்ணதாசன் அந்தக் காலத்துப் பாணர்களின் தொடர்ச்சி. அவரது பாடல்களைப் படிப்பதைக் காட்டிலும் இசையோடு கேட்கும்போது ஏற்படும் பரவசம் விளக்க முடியாதது. அது இசையால் மட்டுமே வருவதல்ல. முதற்காரணம், கண்ணதாசனின் வரிகள்தான். எடுத்துக்காட்டாக, ‘போலீஸ்காரன் மகள்' என்ற திரைப்படத்தில் வரும் ‘இந்த மன்றத்தில் ஓடிவரும்…' பாடலைப் பார்க்கலாம். அழகான மெட்டு, பி.பி. நிவாஸ், ஜானகி இருவரின் மதுரக் குரல்கள். இப்படி இருக்கும்போது இந்த வரி ‘இந்தச் சபைதனில் ஓடிவரும்…' என்றோ, ‘இந்தத் தோட்டத்தில் ஓடிவரும்…' என்றோ இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! ‘மன்றம்' என்ற எளிய சொல்லில் இசை வந்து விழும்போது மாயாஜாலம் நிகழ்கிறது. மேலும், விசித்திரமான சூழலைக் கொண்டது அந்தப் பாடல். ஒரு தங்கை தன் காதலனை நினைத்து இப்படிப் பாடுகிறாள்:
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கிறாள்
அவள் விடிந்த பின் துயில்கின்றாள்
என் வேதனை கூறாயோ?
ஒருத்தி தன் காதல் வேதனையைச் சொல்லும் இந்தப் பாடலின் இடையே அவளுடைய அண்ணன் வேறு நுழைந்துகொள்கிறான். தென்றலிடம் தன் தங்கைக்காக அவனும் தூதுவிடுகின்றான். இந்த அண்ணனையே மறந்துபோகும் அளவுக்கு அவள் அளப்பரிய காதல் கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய காதலின் ஆழத்தைச் சொல்லும் அதே வேளையில், தனது தங்கைக்கு இந்த அண்ணனின் நினைவு இல்லாமல் போய்விட்டதே என்பதையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறான். காதல் பாடலில் அண்ணன் வந்தாலே ஓர் அபஸ்வரம்போல் ஆகிவிடும், இதில் அவன் தனது பொறாமை உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறானே! ஆனால், இசகுபிசகான இந்தத் தருணத்தையே பாடலுக்கு உயிரூட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இப்படி எழுதியிருக்கிறார் கண்ணதாசன்:
தன் கண்ணனைத் தேடுகிறாள்
மனக் காதலைக் கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று
அதனையும் கூறாயோ...

தேன்பனி!
சொற்கள் இசைக்கு உயிர்கொடுக்க வேண்டுமே யொழிய, சொற்களுக்கு இசை உயிர்கொடுக்கக் கூடாது. அதனால்தான் ‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்றான் பாரதி. கண்ண தாசனுடையதோ பனி போன்ற சொல்லின்பம். சொல்லின்பம் என்பது சொல்லில் அதிக அர்த்தத்தை ஏற்றும்போது வருவதல்ல. சொற்களின் சுமையை நீக்கும்போது இனிமை தானாகவே வந்துசேரும். லெப்பர்டி என்ற இத்தாலியக் கவிஞனின் வரிகளைப் பற்றி இதாலோ கால்வினோ இப்படிச் சொல்கிறார்: ‘அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத் தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.' இது சில சமயங்களில் கண்ணதாசனுக்கும் பொருந்தும்.
பனி என்றால் தேன் கலந்த பனி! அப்படித்தான் சொல்ல வேண்டும் கண்ணதாசனின் வரிகளை. ‘பனிபோல் குளிர்ந்தது கனிபோல் இனித்ததம்மா' என்ற வரிகளை வேறு எப்படிச் சொல்வது? இந்த வரிகளின் அர்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சொற்களை மெலிதாக முணுமுணுத்துப் பாருங்கள். எவ்வளவு தண்மை! எவ்வளவு தித்திப்பு! இதேபோல் சொல்லின்பம் தரும் ஒரு சில உதாரணங்களையும் பாருங்கள்:
‘மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு’
(பால்வண்ணம் பருவம் கண்டு - பாசம்)
‘பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனிபோல நாணம் அதை மூடியதேனோ’
(பாவாடை தாவணியில் - நிச்சயத் தாம்பூலம்) ‘முதிராத நெல்லாட ஆடஆட
முளைக்காத சொல்லாட ஆடஆட’
(கட்டோடு குழலாட- பெரிய இடத்துப் பெண்)
‘இளைய கன்னிகை மேகங்கள் என்னும்
இந்திரன் தேரில் வருவாளாம்’
(நாளாம் நாளாம்… - காதலிக்க நேரமில்லை)

தேன்மூடிய சிருங்காரம்
காதல், காம உணர்வுகளைப் பூடகமாகவும் இனிக்கஇனிக்கவும் சொன்னவர் கண்ணதாசன். ஒரு பெண் தன்னுடைய காம உணர்வுகளைச் சொல்வதைச் சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், ‘அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்' என்ற வரிகள் கண்ணதாசன் சொற்களில் சுசீலாவின் குரலில் வந்து விழும்போது ஒழுக்கவாதிகளுக்கும் மயக்கம் வருமே, அதை என்னவென்று சொல்ல! ஆரம்பத்தில் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவளுக்கு, அவன் ‘ஒன்று' தந்த பிறகு உன்மத்தம் ஏறிக்கொள்கிறது. பிறகு, போதாது இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறாள். உண்மையில் அவள் வேண்டாம் என்று சொன்னதெல்லாம் கட்டுப்பாடுகளுக்குப் பயந்தல்ல; தனக்கு உன்மத்தம் ஏறிவிடும் என்று பயந்துதான் என்பது பிறகு தெரிகிறது:
‘தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள், போதாதென்றாள்...

அர்த்தத்துக்கு அடுத்த இடம்தான்
கண்ணதாசன் இப்படியெல்லாம் மயக்கம் தரும்போது அர்த்தத்தை யார்தான் தேடிக்கொண்டிருப்பார்கள். இப்படிச் சொல்வது கண்ணதாசன் அர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவரில்லை என்பது அர்த்தம் அல்ல. அவரது தத்துவப் பாடல் களுக்குள் புகுந்தால் அவற்றிலிருந்தும் மீள முடியாது. சொற்களிலே கவிஞன் கிறுகிறுக்க வைக்கும் போது அங்கே அர்த்தம் நமக்கு இரண்டாம் பட்சமாகப் போய்விடும். ‘உன்னை நான் கொல்லவா?' என்பதை கண்ணதாசன் தனக்கேயுரிய மொழியில் கேட்டால் ‘கொல்லுங்கள்' என்றுதானே நமக்குச் சொல்லத் தோன்றும்.
கண்ணதாசனுக்குத் திரைப்படம், இசை, ‘சிச்சுவேஷன்' எல்லாம் தனது உணர்வுகளையும், சோகங்களையும் கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பு. கண்ணதாசன் தனது இறுதிப் பாடலில் இப்படி எழுதியிருப்பார்:
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே!
உண்மையில், இது நம்மை நோக்கி அவர் வைக்கும் வேண்டுகோள். எப்படி மறக்க முடியும் கண்ணதாசன், உங்களை!
                    - ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: காலங்களில் அவன் வசந்தம்!

Monday, June 12, 2017

அப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது)

கடந்த மாதத்தில், வாழ்வின் முக்கியமான நாளொன்றைச் செலவிட (திருமண நாள்) நானும் என் மனைவியும் தீர்மானித்த இடங்களில் ஒன்று சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையமும் ஒன்றுரயிலில் இறங்கி ஏற அல்லாமல் வேறு ஒரு நோக்கத்தோடு இப்படி ரயில் நிலையம் செல்லும் தருணங்கள் அரிதாகத்தான் நிகழ்கின்றன. சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்துக்குப் பெரிய பெருமை ஒன்று உள்ளது. இந்துஸ்தானி இசையின் மிகப் பெரிய ஆளுமையான அப்துல் கரீம் கான் (11.11.1872 27.10.1937) இறுதி மூச்சு விட்ட நிலையம் அது.

இந்துஸ்தானி இசையின் மயக்கும் காந்தங்களில் ஒருவர் அப்துல் கரீம் கான். அந்த அளவுக்குப் பெண்மை ததும்பும் ஆண்குரல்கள் மிகவும் குறைவு. அவருடைய சங்கீதம், குரல் இனிமை இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. இந்துஸ்தானி இசை ரசனையில் ஆரம்ப நிலையில் இருக்கும் என்னையும் ஈர்க்கும் ஆளுமை அவர். இந்தியாவில் இசைத்தட்டில் முதன்முதலில் ஒலிக்க ஆரம்பித்த இசை ஆளுமைகளில் இவரும் ஒருவர் என்றே அறிகிறேன். அப்துல் கரீம் கான் நம்மூர் பாலசரஸ்வதியின் நண்பரும் கூட, கர்னாடக சங்கீதத்தையும் கற்றிருக்கிறார் என்பதை வைத்துப் பார்க்கும்போது இசை குறித்து திறந்த மனதை அவர் கொண்டிருந்தார் என்பது தெரியவருகிறது. அவர் விட்டுச் சென்ற இசைச் சொத்துக்களில் அவருடைய மகள் ஹீராபாய் படோடேகரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தந்தையைப் போலவே அந்தக் குரலில் அவ்வளவு கனிவு, அவ்வளவு தேன்.மெட்ராஸுக்கு வந்திருந்த அப்துல் கரீம் கான் புதுச்சேரி செல்வதற்காக ரயில் ஏறியிருக்கிறார். சிங்கபெருமாள் கோவில் நிறுத்தம் வந்தபோது அவருக்கு உடல்ரீதியாக ஏதோ அசௌகரியம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, ரயிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார் மருத்துவரீதியான உதவி கிடைக்கும் முன் அவருடைய இறுதி மூச்சு காற்றில் கலந்துவிட்டிருந்தது. விக்கிபீடியாவில் கூட இந்தத் தகவல் இல்லை. சாஸ்திரிய இசை வரலாற்றாசிரியர் வி. ஸ்ரீராம் ஒரு கட்டுரையில் அப்துல் கரீம் கான் மரணத்தைக் குறித்துச் சொல்லும்போது மேற்கண்ட தகவலைத் தருகிறார்   

சிங்கபெருமாள் கோவிலுக்குப் போகிறோம் என்று சொன்னதும் நண்பர் ஒருவர், “ஸ்டேஷனில் இரு பக்கமும் நடந்து பாருங்கள். அப்துல் கரீம் கான் பற்றிய ஏதாவது நினைவுச் சின்னம், குறிப்பு தென்படுகிறதா என்று தேடிப்பாருங்கள்என்றார். சிங்கபெருமாள் கோவில் நிலையத்துக்கு வந்தவுடன் அதேபோல் எனது தேடலை நான் ஆரம்பித்தேன். பயணச் சீட்டை எடுத்துவிட்டு என் மனைவி ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துகொள்ள, நான் அப்துல் கரீம் கானைத் தேட ஆரம்பித்தேன்.  இரண்டு பக்கமும் மெதுவாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். பிலாவல், மார்வா ராகங்களில் அமைந்த அவரது நான்கு, ஐந்து நிமிட நேர அற்புதத் துணுக்குகளைக் காதில் ஒலிக்க விட்டுக்கொண்டே இந்தத் தேடலை நிகழ்த்தினேன்.

அவரது மரணம் தொடர்பான தகவல்கள், நினைவுச்சின்னங்கள் ஏதும் அங்கே கிடைக்கும் என்ற எண்ணம் துளிகூட எனக்குத் தொடக்கத்திலிருந்து இல்லை. ஆயினும் இந்த நிலையத்துக்கு வந்து சேர்ந்ததிலிருந்து இசைவயமான ஒரு ஏகாந்தம் என் மனதில் உருவானது. அப்துல் கரீம் கானின் குரலும் ரயில் நிலையத்தின் அப்பட்டமான வெயிலும் அருகிலிருந்த ஒரு மரத்திலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த குயிலின் கூவலும் இந்த ஏகாந்த நிலையை என் மனதுக்குள் உருவாக்கின.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு (1937) அவர் இங்கே உயிர் விட்டிருக்கிறார். ஆனால், எண்பது ஆண்டுகாலப் பழமை வாய்ந்த ஏதும் அங்கு தென்படவில்லை. வர்தா புயலில் என்ன மரம் என்று கண்டுபிடிக்க முடியாத மரமொன்று வீழ்ந்துபோய், இலைகளும் இல்லாமல், வேர்களின் அந்தரங்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரம் அங்கு இருந்ததா என்பது தெரியவில்லை. எனினும், எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய தரையில்தான் இந்த மரம் வளர்ந்து இன்று சாய்ந்தும் போயிருக்கிறது. இந்தத் தரையின் மேற்பரப்பில், பல கோடி அணுக்களைக் கொண்ட அவரது இறுதி மூச்சுக் காற்றின் ஏதாவது ஒரு அணுத்துகளாவது இன்னும் தங்கியிருக்கும் என்ற உணர்வு என்னுள் உறுதியாக இருந்தது. நம் ஒவ்வொருவர் உடலிலும் ஷேக்ஸ்பியரின் அணுக்கள் கணிசமாக இருக்கின்றன என்று பில் பிரைசன் என்ற அறிவியல் எழுத்தாளர் எழுதியிருக்கிறார்.


ரயில் நிலையம் முழுவதுமே சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டோ, அல்லது அதற்கு முந்தைய சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பழமை கொண்டதாகவோதான் காட்சியளித்ததே தவிர வேறுசில ரயில் நிலையங்களைப் போல நூற்றாண்டு பழமையைச் சுமந்துகொண்டிருக்கவில்லை. மேற்குப் பக்கத்தில், தாம்பரத்தை நோக்கியிருந்த, நிலையப் பெயர்ப் பலகை மட்டும் பழசு போல் தெரிந்தது.


ரயில் நிலையங்கள் அவற்றின் வரலாறு குறித்த ஆவணங்களை வைத்திருக்குமா என்பதுபற்றி எனக்குத் தெரியவில்லை. இந்த ரயில் வந்தது, அந்த ரயில் போனது, இன்னொரு ரயில் விபத்துக்குள்ளானது என்பதைத் தாண்டியும் ரயில் நிலையத்துக்கு வரலாறு இருக்கிறது என்பதை அப்துல் கரீம் கான் எனக்கு உணர்த்தினார். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஏகாந்தத்தையே சுமந்துகொண்டிருக்கும் ரயில் நிலையம், தன் இசையால் ஒவ்வொருவரிடமும் ஏகாந்தத்தை உருவாக்கிய அப்துல் கரீம் கான் என்று இரண்டு ஏகாந்தங்கள் ஒன்றையொன்று குறுக்கிட்டுக்கொண்ட, யாருமறியாத வரலாறு இது.


ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். அவர்களுக்கு நிச்சயம் இது குறித்து ஏதும் தெரிந்திருக்காது. மேலும், சாதாரணத்தின் நடுவில் அசாதாரணம் குறுக்கிட்டால் இந்த நாளின் இயல்பு கெட்டுவிடும் என்று நினைத்தேன். என்னுள் ஏற்பட்டிருக்கும் விநோதமான, மங்கலான உணர்வை, வரலாறு குறித்த தேடல் துல்லியமானதொன்றாக ஆக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆகவே, அங்கே விசாரிக்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இன்னொரு முறை இங்கு வரலாற்றுக்காகவே வந்து விசாரித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். இங்கே மரணமடைந்த அப்துல் கரீம் கானின் உடலை எங்கே அடக்கம் செய்தார்கள் என்றும் அப்போது விசாரித்துப் பார்க்க வேண்டும்
   
 
எண்பது ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பெரிய இசை ஆளுமை இங்கே உயிர்விட்டிருக்கிறார். அது குறித்த ஒரு நினைவு கூட இங்கே எஞ்சியிருக்கவில்லை. மேலைநாடுகளில் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேதை இப்படி உயிர்விட்டிருந்தால் அந்த இடமே நினைவுச்சின்னமாக ஆகியிருந்திருக்கும். ஒருவேளை, இந்தியக் கலையும் இந்திய மனமும் அடையாளமற்றுப் போவதுதானோ என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது.

அப்துல் கரீம் கானின் நினைவு ஏதும் இங்கு தவழ்ந்துகொண்டிருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த மரத்திலிருந்து குயிலொன்று கூவிக்கொண்டிருந்தது. அந்த மரத்துக்குக் கீழே போய் நின்று குயிலைத் தேடிப் பார்த்தேன். சற்று நேரம் கண் ஒடுக்கிப் பார்த்த பிறகு குயில் புலப்பட்டது. குயிலைத் தேட ஆரம்பித்தபோதே அது தன் பாடலை நிறுத்திவிட்டது. குயிலும் அப்துல் கரீம் கானும் ஒன்றல்ல, அவரின் ஆன்மா இதுவல்ல என்றாலும் ஒரே பிரபஞ்ச சங்கீதத்தை அள்ளிக் குடித்த உயிர்கள் என்ற வகையில் அந்தக் குயிலில், அதன் குரலில் அப்துல் கரீம் கானை தரிசித்ததாக உணர்ந்தேன். அதை நான் கண்டுவிட்ட பிறகு அது மறுபடியும் கூவவே இல்லை. அதன்பின், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுவிட்டோம்.

துணைபுரிந்த கட்டுரை:

Musical Connect, V. Sriram, The Hindu, 28-02-2015. Link: http://www.thehindu.com/features/magazine/musical-connect/article6941418.ece


அப்துல் கரீம் கானின் ரத்தினங்களில் சில: 
ஹீராபாய் படோடேகரின் ரத்தினங்களில் சில:

https://www.youtube.com/watch?v=RxKPaQCNttA&t=191s

https://www.youtube.com/watch?v=Rtyzg__-UNY&t=148s