Wednesday, October 21, 2015

ஆசை என்றொரு கவிஞர்

வெங்கட் சாமிநாதன்





இடைவிடாத அணிலின் குரல்
தோட்டம் அணிலாக இருந்தது
அணிலைப் பார்க்கும் வரை
இந்த வரிகளைப் பார்த்ததுமே இது கவிதை என்று உணர. வேறு அடையாளச் சான்றுகள் ஏதும் வேண்டியதில்லை. அணில் கண்ணில் படாத வரை தோட்டம் தான் அணிலாக குரல் கொடுப்பதாகத் தோன்றும். சாதாரண நிகழ்வு தான். இப்படியெல்லாம் யோசித்ததில்லை. அப்படி உணர்ந்திருந்தாலும் அதை கவிதை அனுபவமாக பதிவு செய்ததில்லை.


யாதொரு பிரயத்தனமுமின்றி
சட்டென்றொரு வெளியையும்
உனக்கென உருவாக்கிக் கொண்டாயே
எப்படி?
என்று ஒரு கேள்வியுடன் ஒரு கவிதையைத் தொடங்குகிறார். யாரை? ஆதியும் அந்தமுமில்லாதவனென்று சொல்வோமே அந்த ஆதியை. அந்த வெளி தான் கவிஞரின் வியப்பில் ஆழ்த்திவிடுக்கிறது.

உன் சிறு வெளியில்
நீ கொண்டிருப்பது
யாவருக்குமான பிரபஞ்சம்.
என்றும் வியக்கிறார். இந்த கவிதையில் மாத்திரமில்லை, அனேக மாக இவருடைய கவிதை வெளியே 'சிறு வெளி'யையும் பெரு வெளியான பிரபஞ்சத்தையும். ஒன்றினுள் ஒன்றை அடக்கியதாய், ஒன்றினிலிருந்து மற்றது வெளிப்படுவதான கணங்களில் தான் கவிஞரைப் பெரும்பாலும் காண்கிறோம். அணிலின் குரல் தோட்டத்தின் குரலாவதும், தோட்டத்திலிருந்து அணில் வெளிப்பட்டு தோட்டம் பரந்து கவிந்து கொள்வதும். தோட்டம் அணிலின் குரலைத் தனக்காக்கிக் கொள்ளும் கணங்களே வியப்பின் கணங்கள். கவிதை முடிகிறது இந்த மூன்று வரிகளில். அதே வியப்புடன்.

வியப்பை ஏற்படுத்துகிறது
இல்லாமல் போவது போல்
இல்லாமல் இருந்ததும்.
விடுபடல் என்ற கவிதையில் ஆகாயம் ஆகாயம் என தன் அடையாளத்தைப் பெறுவது அந்த வெளியில் ஒரு சிறு பறவவையாவது பறந்து சென்றால் தான். வானம் வானமாக இருந்ததற்கு எவ்விதத் தடையமுமில்லாமல் போகிறது. பின் அது ஆகாயமில்லை. சூன்யம் தான்.

சூபிகளும் ஜென் துறவிகளும் தியானிக்கும் உலகும் வெளியும் இது என்று தோன்றுகிறது எனக்கு. . கவிஞர் சூபிகளையும் ஜென் ஞானிகளையும் ஆசை படித்துவிட்டுத்தான் தன் கவிதைகளை எழுதுகிறாரா என்று கேட்டால், அவருக்கு இவர்களைத் தெரியுமா என்பதே எனக்குத் தெரியாது. கவிஞரையும் நான் பார்த்தது கூட இல்லாத போது, இக்கேள்விகளையெல்லாம் நான் எனக்குள் கேட்டுக் கொள்வதில்லை. எனக்குத் தெரிந்தது இக்கவிதைகள் எனக்குச் சொல்வதன் மூலம் மானசீகமாக எனக்குத் தெரியும் கவிஞரின் ஆளுமையும், அவரது அனுபவ உலகமும் தான்.
சக காத்திருப்பாளர்கள் என்று கவிதையில் இறுதி யாத்திரை. பாடை எடுத்துக்கொண்டு போகும்போது சிக்னல் விழவே காத்திருக்கிறார்கள். பக்கத்தில் அவரவர் வாகனங்களில் சிக்னலுக்காக காத்திருப்போர். இறந்தவர் வீட்டார், மற்ற அன்னியர் எல்லோரும் காத்திருக்கிறார்கள். பாடையும் காத்திருக்கிறது. இப்படி ஒரு காட்சியை நாம் பார்த்திருந்தாலும் கவிஞருக்கு இந்த காட்சி தரும் அர்த்தத்தில் நாம் பார்த்திருக்கவில்லை. உண்மையும் அது தான். எல்லோருமே காத்திருப்பவர்கள் தாம். இன்று ஒருவர். மற்றவர்களும் 'சிக்னலுக்காக' காத்திருப்பவர்கள் தாம்.
நாங்கள் யாவரும்
காத்திருந்தோம்
பிணமொன்றின் கணத்தில்
சிக்னலுக்காக
ஆனால் அந்த நினைப்பு நமக்கும் மற்றவர்களுக்கும் இல்லை.
எனக்கு நிறைய கவிதைகள் பிடித்திருக்கின்றன. அவை எல்லாமே ஒரு அதைப்பை விட்டுச் செல்கின்றன.

ஒரு கவிதை பெரிய பொய், பெரிய உண்மை பற்றிச் சொல்கிறது. 'பெரிய பொய் சக்தி வாய்ந்தது, பெரிய உண்மை சக்தியற்றது', என்று சொல்லிச் செல்லும் அக்கவிதை இப்படியும் சொல்கிறது. உண்மைதான். ஆனால் நாம் ஒப்புக்கொள்ள மறுப்பது. அரசும் மறுக்கும். நம் தலைமைகளும் மறுக்கும்.
பெரிய உண்மை இருப்பிடம் ஏதுமற்றது
பெரிய பொய் உலகத்தையே
தன் காலுக்குக் கீழே கொண்டது.
இந்த உண்மை தமிழ் நாட்டுக்குமட்டுமல்ல. உலகத்தில் அனேக இடங்களில் இது தான் உண்மை. செய்தித் தாட்களின் தலைப்புச் செய்திகளில் தினம் தினம் சாட்சியம் பெரும் உண்மை.


இந்த கவிதையை அரசியல் தளத்திலும் பொருள்படுவதாகக் கொண்டால், அந்த தளத்தில், கூடுதல் எண்ணிக்கை, முந்தி, செய்தி, அமைதி, நாற்காலி போன்ற கவிதைகளும் இருக்கின்றன. ஒரு பரிகாசத்தோடு தான் அரசியல் பார்க்கப்படுகிறது. அரசியல் கேலிக்கூத்தானால் வேறு என்ன செய்வதாம். 'நாற்காலியை எதிர்த்தவன் கடைசியில் நாற்காலியில் குணங்கள் காணா ஆரம்பித்து விடுகிறான்.
அவர்கள் தான்
கொண்டுவந்து போட்டார்கள்
நான் உட்காரவேண்டுமென்று
ஆசைப்பட்டார்கள்.. என்றவன்,
யோசித்துப் பாருங்கள்
நாற்காலி ஒன்றும்
அவ்வளவு மோசமான பொருள் அல்லவே.
என்று சமாதானமும் நியாயமும் பேச ஆரம்பித்துவிடுவான். இது நமக்கு 50 வருட அரசியல் சரித்திரம்.

மிகப் பயங்கரமான எள்ளலை குளம்படிகளின் சரித்திரம் என்ற கவிதையில் பார்க்கலாம்.
போரின் சித்திரத்தை
தெளிவாக உருவாக்க
குளம்படிகளைத் தவிர
வேறெதுவும் இல்லை
என்று தொடங்கும் ஒரு நீண்ட கவிதை இப்படி முடிகிறது:
சரித்திரம் குளம்படிகளால் எழுதப்பட்டு
காத்திருக்கிறது,
குளம்படிகளால் அழிக்கப்படவும்.

பெயரற்றவர்களின் புத்தகம், வேறொருவரின் கிழமை என்றும் சில கவிதைகள். சம்பந்தமில்லாத ஒரு இணைப்பினால் தான் சிலவற்றின் இருப்பே உணரப்படுகிறது.
பெயரற்று வருகிறோம்
பெயர்களில் நுழைந்துகொள்கிறோம்
பெயர்களை விட்டுச் செல்கிறோம்
என்று தொடங்கும் கவிதை ஒரு பெரிய விடம்பனத்தைப் பற்றிப் பேசுகின்றன. நம்மிடத்தை நம் பெயர்கள் தான் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பெயரற்றது இல்லாததாகிவிடுகிறது.
பெயர்களின்
மரங்களிடையே
பெயரற்ற வெளியில்
பறந்து செல்கின்றன
பெயரற்ற பறவைகள்.
இக்கவிதைகள் வாழ்வது உணர்வுகளின், காட்சி அனுபவங்களின் தியானங்களின் தளத்தில். அவற்றில் புதிய பரிமாணங்களில், புதிய அர்த்தங்களில் நமக்கு நாம் பார்த்த காட்சிகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார், கவிஞர்.

கவிதை அனுபவங்களை மாத்திரமே சொல்கிறது. படிமம், புதிய சொல்லாட்சி, வர்ணணை என்பது போன்ற அலங்காரங்கள் ஏதுமற்று இக்கவிதைகள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்கின்றன. பார்வையில், அனுபவத்தில் ஆழமிருப்பின், எளிமையும் அழகாகவும், ஆழமாக உணரப்படும். மின்னல் வெட்டுத் தெறிப்புக்கு என்ன அலங்காரம் தேவை. அதுவே அனுபவமும், படிமமும் ஆகுமல்லவா. கடைசியாக ஒரு சின்ன கவிதை. இதைப் பற்றி நாம் நிறைய யோசிக்கலாம். இந்த வரிகளை கவிதையாக்குவது எது என்று.
யாருமில்லாவிட்டாலும்
புகைப்படத்தில் இருக்கிறது
காலம்.
காலமும், பெருவெளியும் இவரது கவிதைகளில் பிரதான்ய கவனம் பெறுகின்றன. அரசியலும் பரிகாசத்துடன்.

வெங்கட் சாமிநாதன்/30.11.06

------------------------------------------------------------------------------------------------------------------------------
சித்து: (கவிதைகள்) ஆசை: க்ரியா, H-18, Flat No சௌத் அவென்யு, திருவான்மியூர், சென்னை-41 ரூ 75

-இன்று (21.10.2015)  வெங்கட் சாமிநாதன் காலமாகிவிட்டார். அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் - ஆசை

(என்னுடைய 'சித்து' கவிதைத் தொகுப்புக்கு வெங்கட் சாமிநாதன் அவர்கள் திண்ணை.காமில் எழுதிய விமர்சனம். இணைப்பு: http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60612144&format=print&edition_id=20061214)

No comments:

Post a Comment