Monday, August 4, 2014

காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்


ஆசை

வெயிலடிக்கும்போது மழை பெய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படி நடக்கும் கல்யாணத்தில் யார் யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்று பார்ப்போமா?


மண்புழுவே மண்புழுவே
மெத்தையுடலால்
எங்கு நீயும் செல்கிறாய்
ஊர்ந்து ஊர்ந்து
   காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
   கலந்துகொள்ளப் போகிறேன்
   ஊர்ந்து ஊர்ந்து

வெட்டுக்கிளியே வெட்டுக்கிளியே
வெடுக்கென்று
செல்வதெங்கே நீ
தாவித் தாவி
   காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
   கலந்துகொள்ளப் போகிறேன்
   தாவித் தாவி

தேரையே தேரையே
செல்வதெங்கே நீயும்
தத்தித் தத்தி
   காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
   கலந்துகொள்ளப் போகிறேன்
   தத்தித் தத்தி

பூனையே பூனையே
கண்சுருக்கிப் போவதெங்கே நீயும்
பம்மிப் பம்மி
   காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
   கலந்துகொள்ளப் போகிறேன்
   பம்மிப் பம்மி

பாம்பே பாம்பே
சரசரத்துச்
செல்வதெங்கே நீயும்
வளைந்து நெளிந்து
   காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
   கலந்துகொள்ளப் போகிறேன்
   வளைந்து நெளிந்து

புளிய மரமே புளிய மரமே
தலைவிரித்து ஆடுவதேன்
நிலைகொள்ளாமல்
புரண்டு புரண்டு
   காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
   கலந்துகொள்ளப் போகிறது
   மண்புழு 
   ஊர்ந்து ஊர்ந்து

   வெட்டுக்கிளி
   தாவித் தாவி

   தேரை
   தத்தித் தத்தி

   பூனை
   பம்மிப் பம்மி

   பாம்பு
   வளைந்து நெளிந்து

   செல்ல முடியாமல் தவிக்கிறேன்
   நான் காற்றில்
   புரண்டு புரண்டு

காகமே காகமே
அரக்கப் பரக்கச்
செல்வதெங்கே நீயும்
பறந்து பறந்து
   எனக்கும் நரிக்கும் கல்யாணம்
   மை பூசும் நேரத்தில்
   கண்ணயர்ந்துபோனதால்
   கடைசி ஆளாய்ப் போகிறேன்
   கேள்விக்கு நேரமில்லை
   போகிறேன் நான்
   பறந்து பறந்து

   முடிந்தால் நீயும் வா
   நடந்து நடந்து​


                  ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தப் பாடலைப் படிக்க:

காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்


No comments:

Post a Comment