Monday, August 17, 2015

யானைகளிடமும் அகிம்சை வழிதான் சரிப்படும்!-ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமார் நேர்காணல்




ஆசை

(இந்த நேர்காணலின் மூன்றில் ஒரு பங்கு ‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 08-08-2015 அன்று வெளியானது)

வால்பாறையில் ‘என்.சி.எஃப்’ என்ற இயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்காகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆனந்தகுமாருக்கு, ‘பசுமை ஆஸ்கர்’ என்றழைக்கப்படும் ‘வைட்லி விருது’ சமீபத்தில் வழங்கப்பட்டது. யானை-மனிதர் எதிர்கொள்ளல் தொடர்பான அவரது கடந்த காலப் பணிகளுக்காகவும் எதிர்காலப் பணிகளுக்காகவும் சேர்த்து இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. வால்பாறையில் ஆனந்தகுமாருடன் உரையாடியதிலிருந்து…




பசுமை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ‘வைட்லி விருது’ சமீபத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டது அல்லவா. இந்த விருதுக்காக எப்படி உங்களை அடையாளம் கண்டார்கள்?



‘வைட்லி விருது’ கடந்த 20 வருடங்களாகக் கொடுக்கப்பட்டுவருகிறது. இந்த விருது என்பது அவர்களாகவே அடையாளம் கண்டு வழங்குவதில்லை. ஆண்டுதோறும் இந்த விருதுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். இயற்கை பாதுகாப்பில் ஈடுபட்டுவருபவர்கள் இதற்கென்று விண்ணப்பிக்கலாம். இயற்கை பாதுகாப்பில் புதிதாக நுழைபவர்களுக்கு இது வழங்கப்படுவதில்லை. ஏற்கெனவே குறிப்பிட்ட அளவில் செயல்பட்டு, ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் மேலும் தங்கள் பணியை விரிவுபடுத்திக்கொள்ள உதவும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. ஆகவே, இது விருது மட்டுமல்ல, ஒரு வகை நிதிநல்கை (ஃபெல்லோஷிப்) என்றும் சொல்லலாம். வழக்கமாக, கடந்த காலச் செயல்பாடுகளுக்குத்தான் விருதுகள் வழங்கப்படும். எதிர்காலச் செயல்பாடுகளுக்கும் சேர்த்து வழங்கப்படும் விருது இது.


வெறுமனே விண்ணப்பத்தைப் பார்த்துவிட்டு இது வழங்கப்படுவதில்லை. சரியான சான்றுகள், மதிப்பு வாய்ந்த அறிவியலாளர்களின் ஒப்புகை போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். நான்கு அடுக்கு மதிப்பாய்வுகள் செய்யப்பட்டு, அறிவியலாளர்கள் குழுவால் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் முடிவுகள் எடுக்கப்படும். உலகெங்கிலுமிருந்து 200 விண்ணப்பங்கள் இந்த விருதுக்காகப் பெறப்பட்டன. அதில் முப்பது பேரை பரிசீலனைப் பட்டியலுக்காகத் தேர்ந்தெடுத்து லண்டனுக்கு நேர்காணலுக்கு வரச்செய்தார்கள். அந்த 30 பேரிலிருந்து 8 பேரை விருதுக்காகத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த எட்டுப் பேரில் ஒருவர் ஏற்கெனவே ‘வைட்லி விருது’ பெற்றவர். ஏற்கெனவே ‘வைட்லி விருது’ பெற்றவர்களுக்கு இப்படிச் சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.



இயற்கை பாதுகாப்பு என்ற உலகத்தில் எப்படி நுழைந்தீர்கள்?




நான் ஆந்திரத்திலிருந்து வந்தவன். எனது தாய்மொழி கன்னடம். இயற்கை பாதுகாப்புக்காகத் தமிழ்நாடு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே, என்னைத் தமிழ்நாட்டுக்காரன் என்றும், குறிப்பாக வால்பாறைக்காரன் என்றும்தான் சொல்ல வேண்டும். நான் படித்ததற்கும் இப்போது ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பணிக்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை. மனோதத்துவம் படித்துக்கொண்டிருந்த எனக்கு விலங்குகளின் உளவியல் மீது பெரிதும் ஈடுபாடு இருந்தது. எனது முனைவர் பட்ட வழிகாட்டி டாக்டர் மேவா சிங்தான் என்னை சூழலியலை நோக்கி என்னை அழைத்துவந்தவர். குரங்குகளின் சமூக குணங்களை ஆய்வுசெய்வது குறித்து ஒரு திட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். அதில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் குறித்த விளம்பரம் ஒன்றைப் பார்த்து நானும் அந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். ஆரம்பத்தில் எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல்தான் இருந்தது. அதோ சிங்கவால் குரங்கு என்பார். பார்த்தால் எனக்கு ஒன்றும் தெரியாது. அது கருப்பாக இருக்கும். சுற்றிலும் வெளிச்சமும் அதிகம் இருக்காது. அப்படிப்பட்ட சூழலிலும் அவற்றை எப்படிக் கவனிப்பது என்பதையெல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்தது டாக்டர் மேவா சிங்தான். ஆக, முதலில் நான் ஈடுபட்டது இயற்கை பாதுகாப்பில் அல்ல, சிங்கவால் குரங்குகளின் சமூக குணங்கள் குறித்த ஆய்வில்தான். அப்படியே தென்னிந்தியாவில் உள்ள பிற குரங்குகள் குறித்தும் எனது ஆய்வு நீண்டது. முக்கியமாக, காடுகள் துண்டாடப்பட்டது குரங்குகளின் சமூகக் குணங்களை எப்படி பாதித்தது என்பதும் எனது ஆய்வு உள்ளடக்கியது.



அதற்குப் பிறகு உங்கள் பணிகள் எத்திசையில் சென்றன?



குரங்குகளின் சமூகக் குணங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு தேவாங்குகள் தொடர்பாக எனது ஆய்வு அமைந்தது. திண்டுக்கல் பகுதியிலும் தெற்கு ஆந்திரத்திலும் ஆய்வு செய்தேன். பிறகு ஆனைமலை புலிகள் சரணாலயப் பகுதியில் பெரிய பாலூட்டிகளின் பரவல் எப்படி இருக்கிறது என்ற ஆய்வு. அப்புறம்தான் யானைகள் உலகில் நுழைந்தேன்.


யானைகளைப் பொறுத்தவரை நீங்கள் முதலில் யானைகள் பாதுகாப்பு என்ற விஷயத்தில் ஈடுபட்டீர்களா, அல்லது நேரடியாக யானைகள்-மனிதர்கள் மோதல் என்ற பிரச்சினையை எடுத்துக்கொண்டீர்களா?


இதை யானைகள்-மனிதர்கள் மோதல் என்பதைவிட யானைகள்-மனிதர்கள் எதிர்கொள்ளல் என்றுதான் சொல்ல வேண்டும். 2002 வாக்கில் நான் குரங்குகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். எனது சகாக்களான திவ்யா முத்தப்பா, சங்கர்ராமன் ஆகியோர் வேறுவேறு உயிரினங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது ஒரு மீட்டுருவாக்கத் திட்டம் (ரெஸ்டோரேஷன் புரோகிராம்) தொடர்பாக தேயிலைத் தோட்ட மேனேஜர்களுடன் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு மேனேஜர் யானைகள்-மனிதர்கள் மோதல் என்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த சிக்கலைத் தீர்க்க ஏதாவது செய்யுங்களேன் என்று கேட்டுக்கொண்டார். அப்படித்தான் இந்தத் திட்டத்தை திவ்யா முத்தப்பா, சங்கர்ராமன், நான், மதுசூதனன் என்ற நண்பர் ஆகிய நால்வரும் தொடங்கினோம். ‘யூ.எஸ். ஃபிஷ் அண்டு வைல்டுலைஃப் செர்வீஸ்’ என்ற அமைப்பின் ஆதரவு எங்களுக்குக் கிடைத்தது. ஒரு கட்டத்தில் மற்ற சகாக்கள் அவரவர் திட்டப் பணிகளுக்குத் திரும்பிவிட நான் மட்டும் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்தேன். இந்தத் திட்டத்தில் எனக்கு உறுதுணையாக இருப்பவர் கணேஷ் ரகுநாதன்.



வழக்கமாக, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு என்றெல்லாம் வந்தாலே தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்ட நிர்வாகங்களெல்லாம் வளர்ச்சிக்கு எதிரான செயல்பாடுகள் என்று எதிர்ப்பார்கள். ஆனால், இந்த விஷயத்தில் ஆதரவு கொடுத்ததற்கு என்ன காரணம்?



இந்த யானைகள்-மனிதர்கள் எதிர்கொள்ளலால் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், அந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன்பு ஏழெட்டு ஆண்டுகள் நாங்கள் செயல்படுவதையெல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். நாங்கள் ஆய்வு செய்பவர்கள், எங்களால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்தார்கள். ஆகவே, யானைகள்-மனிதர்கள் எதிர்கொள்ளல் தொடர்பான திட்டத்துக்கு அவர்கள் ஆதரவு வழங்கினார்கள். இது உண்மையிலேயே பாராட்டத் தக்க விஷயம்.



யானைகள்-மனிதர்கள் எதிர்கொள்ளல் என்பது முன்பு எப்படி இருந்தது? தற்போது எப்படி இருக்கிறது? இந்த வரலாற்றைப் பற்றிச் சொல்லுங்களேன்.



நாங்கள் இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முந்தைய காலத்தில் தரவுகள் அதிக அளவில் கிடைக்கவில்லை. ஆனைமலை சரணாலயம் சார்ந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் குறித்து ஆய்வுசெய்தோம். ரேஷன் கடைகள், வீடுகள், சமயத்தில் பள்ளிகளும், மதிய உணவுக்காக அரிசி, பருப்பு வகைகள் வைத்திருப்பார்கள் அல்லவா, அதனால் அந்த இடங்கள் யானைகளால் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான தரவுகளைக் குறித்துவைத்திருக்கிறார்கள். உயிர்ச் சேதங்கள் என்று பார்த்தால் 1994-லிருந்து 2015-வரை 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு இறப்பு தொடர்பாகவும் நாங்கள் ஆய்வுகளைச் செய்தபோது எங்களுக்குத் தெரியவந்த விஷயம் என்னவென்றால் இறந்தவர்களில் 36 பேருக்கு அருகில் யானைகள் இருந்த விஷயம் தெரியாது. பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்குச் செல்லும் நேரத்தில், பெரும்பாலும் இருட்ட ஆரம்பிக்கும் நேரத்தில்தான், இந்த எதிர்கொள்ளல் நிகழ்ந்து மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. தகவல் தெரிந்திருந்தால் அவர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.


பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டங்களில் மனித நடமாட்டமும் சாலைகள் வழியாக லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்தும் காணப்படுவதால் யானைகள் அந்த நேரத்தில் இந்தப் பகுதிகளில் நடமாடுவதில்லை. பகல் நேரத்தில் யானைகள் ஒரு துண்டுச்சோலையில் தங்கிவிட்டு, இருட்ட ஆரம்பித்த பிறகு மற்றொரு துண்டுச்சோலைக்குச் செல்லும். கடல் போல பரந்திருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கிடையே தீவுபோல் அமைந்திருக்கும் துண்டாகிப்போன மழைக்காட்டுப் பகுதியே இவ்வூர் மக்கள் துண்டுச்சோலை என்றழைக்கின்றனர். வால்பாறை பகுதியில் கிட்டத்தட்ட 40 துண்டுச்சோலைகள் மட்டுமே இருக்கின்றன.



யானைகள்- மனிதர்கள் மோதல்களில் இறந்தவர்களில் கிட்டத்தட்ட 27 பேர் சாலைகளில் இறந்திருக்கிறார்கள். துண்டுச்சோலைகளுக்கிடையில் யானைகள் இடம்பெயரும்போதுதான் இந்த இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆகவே, இந்தப் பிரச்சினையை முழுவதுமாகப் புரிந்துகொள்வதற்காக யானைகளின் குண இயல்புகள், எந்தெந்த இடங்களில் எதிர்கொள்ளல் நிகழ்கிறது, உயிர்-உடைமை சேதங்கள், காடு அழிப்பால் ஏற்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றை பாரபட்சமற்ற முறையில் ஆய்வுசெய்தோம்.



மோதல்களின், அதாவது எதிர்கொள்ளல்களின் தன்மை எப்படி இருக்கும்? யானை எப்படித் தாக்கும்?



தாக்குதல்களில் இறந்தவர்களில் அநேகமாக யாரையுமே யானைகள் துரத்திக்கொண்டுவந்து தாக்கவேயில்லை. மனிதர், யானை இருவருமே எதிர்பாராத ஒரு சந்திப்பு அருகருகே ஏற்படும்போது மனிதர் எந்த அளவுக்கு பீதியடைந்திருப்பாரோ அதே அளவுக்கு யானையும் பீதியடைந்திருக்கும். யானைகள் எப்போதும் எடுத்தவுடனேயே தாக்குவதில்லை. சில எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கொடுக்கும். போலித் தாக்குதல் செய்யும். ‘நான் இங்கே இருக்கிறேன், வராதே’ என்றுதான் அந்த சமிக்ஞைகளுக்கு அர்த்தம். ஆனால், அந்த மொழி மக்களுக்குப் புரியாதபோதுதான் பிரச்சினை. அடிப்படையில், இதற்கு குறிப்பிட்ட தூர இடைவெளி இருக்க வேண்டும். இருட்டிய சமயத்தில் எதிர்பாராத வகையில் அருகருகே மனிதரும் யானையும் சந்தித்துக்கொண்டால் இது போன்று யானைகள் எச்சரிக்கை கொடுப்பதற்குச் சற்றும் வாய்ப்பில்லை. ஆகவே, யானைகள் நேரடியாகத் தாக்கிவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், இருட்டில் யானைக்கும் பாறைக்கும் வித்தியாசம் தெரியாது. யானைகளும் அசையாமல் நிற்கும். சமயத்தில் டார்ச் லைட் வைத்திருப்பவர்கள் ஒரு யானையின் மீது மட்டும் கவனத்தை வைத்திருப்பார்கள். ஆனால், சுற்றிலும் ஒரு யானைக் கூட்டமே இருக்கும். அப்போதும் ஆபத்தாகிவிடுகிறது.



தொடர்ந்து இப்படி எதிர்கொள்ளல் தீவிரமாவதற்கு அடிப்படையான காரணம் என்ன? யானைகளும் மனிதர்களும் ஒன்றாக அமைதியாக வாழ முடியாதா?


வாழ முடியும். வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள். இதுபோன்ற பிரச்சினைகள் தீவிரமாகும்போது மக்களுடைய உணர்வுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. வரலாற்றை எடுத்துப்பார்த்தால் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் வர ஆரம்பித்து 120 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக ஏராளமான மக்களும் இங்கே வந்து குடிபுக ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி இருக்கும் சூழலில் உயிரினங்களின் நலனுக்காக நீங்கள் இந்த இடத்தை விட்டுச் செல்லுங்கள் என்று மக்களிடமும் சொல்ல முடியாது. காலம் காலமாக தாங்கள் வாழ்ந்துவந்த இடத்தின் பரப்பு குறுக்கப்பட்டுவிட்டதால் யானைகள் பாதிப்புக்குள்ளாவதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. யானைகளைப் பொறுத்தவரை ஒரு இடத்துக்கு விசுவாசமாக இருக்கக் கூடியவை. அதன் வாழிடத்தில் தேயிலைத் தோட்டம், அணைகள், தொழிற்சாலைகள் என்று எது வந்தாலும் அந்த இடத்தை விட்டு அவை போவதில்லை. ஆக, வாழிடத்துக்கு பாதிப்பு ஏற்படும்போது பிரச்சினை தீவிரமாகிறது. மக்கள், யானைகள் இரண்டு தரப்பையும் சுமுகமான சகவாழ்வு வாழ வைப்பது எப்படி என்பதுதான் நம் முன்னால் உள்ள சவால்.



கழிப்பறை வசதிகள் இல்லாததும் இந்த இறப்புகளுக்கான காரணங்களில் ஒன்று என்றும் சொல்லப்படுகிறதே?


ஆம். பாதுகாப்பு என்பது இங்கே இரண்டு வகைப்படும். தொழில் இடங்களில் தரப்படும் பாதுகாப்பு. வீட்டுச் சூழலின் பாதுகாப்பு. தேயிலைத் தோட்டங்களைப் பொறுத்தவரை தினமும் காலையில் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்கு முன் கண்காணிப்பாளர் ஒருவர் வந்து அந்தப் பிரதேசத்தில் யானைகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதைப் பார்வையிட்டுவிட்டுச் செல்வார். எந்த ஆபத்தும் இல்லை என்பது தெரிந்த பிறகே பணியாளர்கள் அங்கே வருவார்கள். இந்த ஏற்பாட்டை எல்லாத் தோட்டங்களும் பின்பற்றிவருவது பாராட்டத் தக்கது.



அடுத்தது, வீட்டுச் சூழலில் பாதுகாப்பு. கழிப்பிடங்கள், ஒதுக்குப்புறங்கள் வீட்டிலிருந்து தள்ளியிருக்கும் சூழலில் விடியற்காலையிலோ இரவு நேரத்திலோ இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லும் நேரத்திலும் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கோயம்புத்தூர் வனப்பிரிவை நாங்கள் ஆய்வுசெய்தபோது திடுக்கிட வைக்கும் தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. வால்பாறை பகுதியில் கூட 21 ஆண்டுகளில் 41 பேர்தான். ஆனால், கடந்த ஐந்தரை ஆண்டுகளில் 69 பேர் யானை-மனிதர் எதிர்கொள்ளலில் கோயம்புத்தூர் வனப்பிரிவில் இறந்திருக்கிறார்கள். இதில் கணிசமானோர் கழிப்பிடம் தேடிச் சென்றபோது தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார்கள். வீட்டோடு இணைந்த கழிப்பறைகளின் முக்கியத்துவத்தை இந்தப் பிரச்சினை நமக்கு உணர்த்துகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைக்குள் சமூகப் பிரச்சினை ஒன்றும் இருப்பதைப் புரிந்துகொண்டு, அந்த மக்களுக்குக் கழிப்பறைகளை அரசு கட்டித்தருமென்றால் கணிசமான இறப்புகளைத் தடுக்க முடியும்.



இந்தியாவில் யானைகள் உள்ள மற்ற பகுதிகளில் மனிதர்-யானைகள் எதிர்கொள்ளல் பிரச்சினை எந்த அளவுக்கு இருக்கிறது. அங்கெல்லாம் உயிர்ச் சேதம் அதிகமாக இருக்கிறதா?


எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அங்கேயும் உண்டு. தமிழ்நாட்டில் பார்த்தால் ஓசூர், சேலம், ஈரோடு. அதேபோல், கர்நாடகம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், வடகிழக்கில் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் இந்தப் பிரச்சினை தீவிரமாகத்தான் இருக்கிறது. இந்த இடங்களில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தீர்வுகளை விட முக்கியமானவை செயல்முறைகள்தான். மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் கருத்துகளையும் அரசு புரிந்துகொள்வதில்லை. அறிவியலாளர்களின் பரிந்துரைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. தானாக அரசு ஒரு முடிவை எடுத்துச் செயல்படுத்துகிறது. இதனால் மக்களின் தேவைக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு, பிரச்சினைகள் மேலும் தீவிரமாக ஆகிக்கொண்டிருக்கின்றன.



இந்தச் சூழலில் உங்களது தற்போதைய வழிமுறையை எப்போது ஆரம்பித்தீர்கள். இந்த யோசனை எப்படி உதித்தது?


ஒரு இடத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால் அந்தப் பகுதி மக்களிடம் நேரடியாகச் சென்று எச்சரிக்கை வழங்கிக்கொண்டிருந்தோம். 2006-ல் இந்தப் பிரச்சினை தொடர்பாக ஒரு பிரசண்டேஷனை தேயிலைத் தோட்டத்தினர், மக்கள் போன்றோரிடம் வழங்கினோம். அதுவரை ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தபோது ஒரு மேனேஜர் முக்கியமான யோசனை ஒன்றைப் பரிந்துரைத்தார். ‘கேபிள் டிவியை நீங்கள் ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது?’ என்று அவர் கேட்டார். யானைகள் நடமாட்டம் பற்றிய எச்சரிக்கைகளை அதற்குப் பிறகு கேபிள் டிவியின் மூலம் கொடுக்க ஆரம்பித்தோம். வால்பாறையில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் கேபிள் இணைப்புகள் இருந்ததால் அதற்கு நல்ல பலன் கிடைத்தது. கேபிள் டிவியின் இடத்தை டிஷ் டிவி ஆக்கிரமிக்க ஆரம்பித்த பிறகு என்ன செய்வது என்று யோசித்தபோது உருவான யோசனைதான் எஸ்.எம்.எஸ் திட்டம். எஸ்.எம்.எஸ் மூலம் எச்சரிக்கைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் அனுப்ப ஆரம்பித்தோம். படிக்கத் தெரியாதவர்களும் இருப்பார்கள் என்பதால் படங்களாகவும் அனுப்பினோம். ஆரம்பத்தில் 600 பேர் தங்கள் எண்களை இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொண்டிருந்தார்கள். அது தற்போது 3,000 எண்களாக விரிவடைந்திருக்கிறது. 3,000 எண்கள் என்றால் 3,000 குடும்பங்கள். கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேரைச் சென்றுசேர்கிறது. இதன் மூலம் மக்கள் எச்சரிக்கையடைந்ததால் உயிர்ச் சேதம் மட்டுமல்லாமல் பொருட்சேதமும் பெருமளவில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் எங்களுக்குத் தெரியவந்த விஷயம் என்னவென்றால் மக்களுக்கு சரியான தகவல்கள் கிடைத்தால் பிரச்சினை ஓரளவுக்குத் தீர்க்கப்படுகிறது என்பதுதான். இந்தத் திட்டத்தில் மக்கள் உற்சாகமாகப் பங்குகொண்டார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள், மேனேஜர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இருக்கிறார்கள். ஒரு பிரதேசத்தில் யானைகள் நடமாட்டத்தை அவர்கள் பார்ப்பார்கள் என்றால் உடனடியாக எங்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள். நாங்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் எச்சரிக்கையைக் கொடுப்போம்.



முதலில் கேபிள் டி.வி, அடுத்தது எஸ்.எம்.எஸ் எச்சரிக்கை, இதன் அடுத்த கட்ட பரிணாமம் என்ன?


அடுத்தது ‘அபாய விளக்கு எச்சரிக்கை’. கைபேசிகளைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினை. பலரிடமும் சீனத் தயாரிப்புக் கைபேசிகள் இருக்கின்றன. அந்தக் கைபேசிகளுக்கு அனுப்பப்படும் தமிழ் எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்கள் கட்டம் கட்டமாகத்தான் தெரியும். ஆகவே, மாற்று வழிகளை யோசித்துக்கொண்டிருந்தபோது ஒரு தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த காவலாளி ஒரு சம்பவத்தை எங்களுக்குச் சொன்னார். ஒருமுறை இரவு நேரத்தில் யானை நடமாட்டம் இருப்பதை அந்தக் காவலாளி கண்டுகொண்டார். இது தெரியாமல் அந்த இடத்தை நோக்கி ஒரு நபர் நடந்துவந்துகொண்டிருந்ததையும் பார்த்துவிட்டார். உடனே, அந்தக் காவலாளி டார்ச் லைட் வெளிச்சத்தை யானைகள் மீது மாற்றி மாற்றி அடித்ததும் அந்த நபர் எச்சரிக்கை அடைந்து வேறு திசையில் சென்றுவிட்டார். காவலாளியின் சமயோஜித அறிவால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது. இந்த யோசனையை அடிப்படையாகக் கொண்டு ‘அபாய விளக்கு எச்சரிக்கை’ என்ற முறையைத் தொடங்கினோம். 24 இடங்களில் அபாய விளக்குகளை நிறுவினோம். அந்த அபாய விளக்குகளில் சிம் கார்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட ஒரு பகுதியில் யானைகள் நடமாட்டம் தெரிந்தால் குறிப்பிட்ட அந்த சிம் கார்டுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அந்த அபாய விளக்கு சிவப்பு நிறத்தில் ஃப்ளாஷ் அடித்தபடி எரியும். மற்ற சிவப்பு விளக்குகளிலிருந்து வேறுபடுத்துவதற்காக இந்த ஏற்பாடு. சாதாரண மக்களின் அனுபவம் எந்த அளவுக்கு நமக்குத் துணைபுரியும் என்பதற்கு அந்தக் காவலாளியின் யோசனை ஒரு உதாரணம்.



இந்தத் திட்டம் இந்த அளவுக்கு வெற்றியடைந்ததற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?



முதலில் இந்தத் திட்டம் எல்லோருடைய ஒத்துழைப்பிலும் செயல்படுவது. தனியாக நாங்கள் மட்டுமே சிந்தித்திருந்தால் எந்தப் பலனும் இருந்திருக்காது. நாங்கள், மக்கள், வனத்துறை என்று எல்லாத் தரப்பும் சேர்ந்ததால்தன் இந்தப் பலன் கிடைத்திருக்கிறது. எங்கள் எஸ்.எம்.எஸ் கிடைத்தவுடனே வனத்துறையின் அதிரடிப்படை யானைகள் நடமாட்டம் காணப்படும் இடத்துக்குச் சென்று வாகனத்தை நிறுத்துவார்கள். இதனால் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வும், வனத்துறை மீது ஒரு நம்பிக்கையும் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாடுதான் இந்தத் திட்டத்தின் வெற்றிக்குக் காரணம்.



இந்தத் திட்டத்தை மற்ற இடங்களிலும் செயல்படுத்தலாமே?



இதில் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் பின்பற்றப்படும் வழிமுறையை அப்படியே இன்னொரு இடத்துக்குப் பொருத்திப்பார்க்க முடியாது. அந்த இடத்தில் பிரச்சினை என்ன என்பதை ஆராய்ந்துபார்த்துவிட்டு மக்களின் கருத்துகளையும் அனுபவங்களையும் கேட்டறிந்துவிட்டு அதற்குத் தகுந்தாற்போல் தீர்வு காணப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் நல்ல பலன்கள் ஏற்படும். கோயம்புத்தூர் வனப்பிரிவில் எஸ்.எம்.எஸ். முறை நல்ல பலன் தருவதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைக்கின்றன.



உயிர்ச் சேதங்கள் எந்த அளவுக்கு இப்போது குறைந்திருக்கின்றன?


1994-லிருந்து எங்கள் திட்டம் ஆரம்பித்த 2002 வரை ஆண்டுக்கு 3 பேர் என்ற வீதத்தில் உயிரிழந்துகொண்டிருந்தார்கள். இப்போது ஆண்டுக்கு 1 என்ற சராசரிக்கு வந்திருக்கிறது. அதிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு உயிர்ச் சேதம் கூட இல்லை என்பது பெரும் வெற்றி. இந்த வழிமுறை செயல்படுத்தாவிட்டால் இன்னும் 18 உயிர்கள் பலியாகியிருந்திருக்கக் கூடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாமல், யானை பயத்தில் வீட்டிலேயே சிறைப்பட்டது போன்ற நிலையிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. யானை நடமாட்டத்தைப் பற்றிய தெளிவான தகவல்கள் அவர்களுக்குக் கிடைப்பதால் அதற்கேற்ப தங்கள் திட்டங்களை அவர்கள் அமைத்துக்கொள்ள முடிகிறது. வெளியூரிலிருந்து யாராவது பார்க்க வந்தால் அவர்களுக்கும் எச்சரிக்கை கொடுக்க முடிகிறது. யானைகளின் நடமாட்டத்தைப் பற்றி ஆரம்பத்தில் நாங்கள் மக்களுக்குத் தகவல் தெரிவித்த நிலை மாறி இப்போது அவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதற்கு உதவும் அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் மக்களின் பங்கேற்பும் பொறுப்புணர்வும் நமக்குப் புலப்படும். வனத்துறையிலும் பெரும் மாற்றம் வந்திருக்கிறது. துடிப்பான அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். புதிய கருவிகள் வாங்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஆக்கபூர்வமான சூழலை உணர முடிகிறது.

வீட்டருகே யானை வந்தால் என்ன செய்வது?



வீட்டை சாத்திக்கொண்டு சத்தமாகப் பேச வேண்டும். பதற்றமாகக் கூடாது. பேச்சு சத்தம் கேட்டாலே ஆட்கள் இருக்கிறார்கள் என்று பயந்துகொண்டு ஓடிவிடும். சில எஸ்டேட்காரர்கள் லாரிகளை வைத்து யானைகளைத் துரத்துவார்கள். அதனால் சேதம் குறைக்கப்பட்டதற்கு சான்றுகள் ஏதும் இல்லை. பிபிடிசி நிறுவனம், யானைகளைத் துரத்தவோ அவற்றுக்கு தொந்தரவு கொடுக்கவோ கூடாது என்று ஒரு பாலிசியைக் கொண்டுவந்தார்கள். அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் யானைகளால் பெரிதும் பிரச்சினை ஏற்படவில்லை. முன்பு, அந்தப் பிரச்சினை அதிகம் இருந்த பகுதி அது. ஆகவே, ஆங்கிலேயரிடம் நாம் கையாண்ட அகிம்சையை விலங்குகளிடமும் கையாள்வதுதான் ஒரே வழி!



இந்த வழிமுறையை சிறுத்தைகள் போன்ற விலங்குகளுக்கும் செயல்படுத்த முடியாதா?



முடியாது. அவற்றின் இயல்புகள் யானையின் இயல்பிலிருந்து வேறுபடுவதுடன், யானையின் உருவம் போன்று எளிதில் காணக்கூடியவையாகவும் அவை இல்லை. இதற்கு வேறுசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். வீட்டைச் சுற்றிக் குப்பைகள் போடக் கூடாது. குப்பைகள் போட்டால் பன்றிகள் வரும் பன்றிகளைத் தேடிக்கொண்டு சிறுத்தைகள் வரும். வீட்டில் நாய், பூனைகளை வளர்க்கக் கூடாது. மாலை நேரத்திலும் இரவிலும் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடக் கூடாது. இதுபோன்ற பல எச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.



யானை-மனிதர் விவகாரத்தில் மக்கள், அரசுத் தரப்பு, ஊடகங்கள் போன்றவற்றின் புரிதல் எந்த அளவுக்கு இருக்கிறது?



எல்லோரும் யானைப் பிரச்சினை, யானைப் பிரச்சினை என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது யானைப் பிரச்சினை அல்ல, இடத்துப் பிரச்சினை. வால்பாறையைப் போலவே கோயம்புத்தூர் வனப் பகுதி, தடாகம், பெரியநாயக்கன் பாளையம் போன்ற பகுதிகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். அங்கேயும் இறப்புகள் அதிகமாக இருக்கின்றன. தடாகம் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு 20 அல்லது 30 செங்கல் சூளைகள் இருந்தன. தற்போது 200 அல்லது 300 என்ற அளவில் சூளைகள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல், புதுப்புதுக் கட்டிடங்கள், யோகா நிலையங்கள் என்று யானையின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படும்போது யானைகள் சுற்றுவழியில்தானே செல்லும்? அப்படிச் சுற்றுவழியில் செல்லும்போது யானை-மனிதர் எதிர்கொள்ளல் பிரச்சினை தீவிரமாகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்னால் யானைகளையே தாங்கள் பார்த்ததில்லை; ஆனால், இப்போது அடிக்கடி பார்க்க நேரிடுகிறது என்று இங்குள்ள மக்கள் சொல்வதை இந்தப் பின்னணியில் வைத்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
இதில் ஊடகங்களின் பங்கும் மிகவும் முக்கியம். யானைகள் அட்டூழியம், அட்டகாசம் என்றெல்லாம் பரபரப்பாகச் செய்திகள் வெளியிடுவதை விட்டுவிட்டு உண்மையான காரணம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். மக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு அசம்பாவிதச் சம்பவத்துக்குப் பிறகும் யானைகள் மீதோ, அரசு மீதோ கோபப்படுவது மிகவும் எளிது. ஊடகங்கள்தான் பிரச்சினையின் உண்மையான காரணங்களை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். அப்படி யாரும் செய்யாததால் மக்கள் இன்னும் இந்தப் பிரச்சினை குறித்து விழிப்புணர்வு இல்லாமலேயே இருக்கிறார்கள்.



உங்கள் செயல்பட்டை அடுத்த கட்டத்துக்கு விரிவாக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?

ஆம். இந்த ‘வைட்லி விருது’ தொகையைக் கொண்டு வால்பாறையில் மட்டுமல்லாமல் சத்தியமங்கலம் பகுதியிலும் சில செயல்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறோம். அதை அடுத்து ஹாசன் பகுதி.



எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினைகளை முற்றிலும் தீர்ப்பதற்கு என்ன வழி?


மனிதர்களும் யானைகளும் அருகருகே வாழ்ந்தேயாக வேண்டும் என்பதால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்று ஏதும் காண முடியாது. நிரந்தரமாகச் சமாளித்துக்கொண்டுதான் இருக்க வேண்டிய சூழல்தான் யதார்த்தம். யானைகளின் கேந்திரத்தில் காடுகளை அழிப்பது, அணைகள் கட்டுவது, நீர்மின்திட்டங்கள் கொண்டுவருவது, சாலைகள் போடுவது என்று கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டால் பிரச்சினை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.
  - நன்றி: ‘தி இந்து’
 - ‘தி இந்து’வில் வெளியான இந்தக் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவத்தைப் படிக்க: யானைகளிடமும் அகிம்சை வழிதான் சரிப்படும்!




1 comment:

  1. மனிதனால் மிருகம் பாதிக்கப்படுவதே அதிகம். அவ்வகையில் யானையும் விதிவிலக்கல்ல. விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு. நன்றி.

    ReplyDelete