Wednesday, December 30, 2015

ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியலின் நூற்றாண்டு



வால்ட்டர் ஐஸாக்ஸன்

அறிவியல் வரலாற்றிலேயே மிகவும் அழகான கோட்பாடு என்று கருதப்படும் ஐன்ஸ்டைனின்பொதுச் சார்பியல் கோட்பாடுவெளியாகி சரியாக நூறு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. (1915 நவம்பர் 25 அன்று ஒரு ஆய்வரங்கில் அந்தக் கோட்பாட்டை முன்வைத்த ஐன்ஸ்டைன் ஒரு வாரம் கழித்து டிசம்பர் 2 அன்று கட்டுரையாகத் தனது கோட்பாட்டை வெளியிடுகிறார். அறிவியலாளர்களின் அங்கீகாரத்துடன் 1916 மார்ச் 20-ல் ‘Annalen der Physik’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டது.) ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனின் வழிகாட்டும் ஒளியாக இருந்து, அவரது அற்புதமான அறிவியல் கோட்பாடுகள் உருவாவதற்குக் காரணமாக இருந்தஎண்ணப் பரிசோதனைகளையும் நாம் இந்தத் தருணத்தில் கொண்டாட வேண்டும். அவர் செய்தஎண்ணப் பரிசோதனைகள்என்பவை சோதனைச்சாலையில் செய்தவையல்ல. தன் தலைக்குள் எண்ணங்களைச் சுழல விட்டுச் சுழல விட்டு அவர் நடத்திய மூளைப் பரிசோதனைகள். இந்தப் பரிசோதனைகளை அவர் மிகவும் விரும்பிச் செய்தார்.

படைப்பாக்கம் என்பது கற்பனைத் திறனை அடிப்படையாகக் கொண்டது என்பதை இந்த எண்ணப் பரிசோதனைகள் நமக்கு உணர்த்துகின்றன. அறிவியலை நோக்கிக் குழந்தைகளை ஈர்க்க வேண்டுமென்றால் கணிதப் பாடத்தைக் கொண்டு அவர்களை சுளுக்கெடுப்பதும் சூத்திரங்களை மனப்பாடம் செய்யச் சொல்வதையும் முதலில் விட வேண்டும். அவர்களுடைய மனக்கண்களில் பொறிபறக்கச் செய்ய வேண்டும். அவர்களையும் பகல்கனவு காணச் செய்ய வேண்டும்.

தனது 16-வது வயதில்தான் ஐன்ஸ்டைன் முதலாவது எண்ணப் பரிசோதனையைச் செய்துபார்த்தார். கற்பனைத் திறனுக்கு மதிப்பளிக்காமல் மனப்பாடக் கல்வியையே வலியுறுத்திய ஜெர்மனி பள்ளிக்கூடம் ஒன்றிலிருந்து ஓடிவந்து சுவிட்சர்லாந்தில் உள்ள கிராமத்துப் பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்ந்துகொண்டார். மாணவர்களின் கற்பனைத் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்த பள்ளி அது. அங்கே படித்தபோதுதான், ஒளிக்கதிர் ஒன்றின் வேகத்தில் சென்று அந்தக் கதிரை எட்டிப்பிடித்தால் என்ன ஆகும் என்று ஐன்ஸ்டைன் தனது மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்துக்கொண்டார். அப்படி ஒளிக்கதிரோடு இணையாகப் பயணித்தால்ஓய்வு நிலையில் இருக்கும் மின்காந்தப் புலத்தைப் போன்று அந்த ஒளிக்கதிர் எனக்குத் தெரிந்திருக்கும்என்று பின்னாட்களில் ஐன்ஸ்டைன் எழுதினார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அந்த (ஒளி) அலை நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போன்று தோன்றியிருக்கும். ஆனால், மின்காந்தப் புலங்களின் இயக்கத்தையும் அலைவுகளையும் பற்றி விவரிக்கும் மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் படி இது சாத்தியமே இல்லை.     

அவரது எண்ணப் பரிசோதனைக்கும் மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு காரணமாக ஐன்ஸ்டைனுக்குப் பதற்றம் உருவானது. படபடப்புடன் இங்கும் அங்குமாகத் திரிந்தார். அவரது உள்ளங்கைகளில் வேர்த்தது. நமக்கும் பதின்பருவத்தில் உள்ளங்கைகள் வேர்த்திருக்கலாம். ஆனால், அதற்கும் மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இருந்திருக்காது. நமதுஎண்ணப் பரிசோதனைகள்அந்த அளவுக்கு எழுச்சி பெற்றவையாக இருந்திருக்காது.

ஒளிக் கதிர் ஒன்றை நோக்குபவர்கள் அந்த ஒளிக்கதிரின் தோற்றுவாயை நோக்கியோ அதிலிருந்து விலகியோ சென்றாலும் ஒளியின் வேகம் மாறுபடுவதில்லை என்பதை 1900-களின் தொடக்கத்தில் பல்வேறு சோதனைகள் உறுதிப்படுத்தின. இயற்பியல் வட்டாரம் இதனால் குழம்பிப்போயிருந்தது. ஐன்ஸ்டைனும் அப்படியே. ஆகவே, 1905-ல் அவர் புதிய எண்ணப் பரிசோதனைகள் சிலவற்றை நிகழ்த்திப் பார்த்தார்.     

அப்போது அவர் சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் வேலை பார்த்தார். ஒரு கண்டுபிடிப்பும், அதற்கு அடிப்படையாக இருக்கும் கோட்பாட்டுச் சட்டகமும் நடைமுறையில் எப்படி இருக்கும் என்று தினமும் மனக்கண்ணில் ஓட்டிப் பார்ப்பார். தூரத்தில் இருக்கும் கடிகாரங்களில் ஒரே மாதிரி நேரத்தைப் பொருத்துவதற்கான கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறுவது குறித்து வரும் விண்ணப்பங்களை ஆய்வுசெய்வதும் ஐன்ஸ்டைனின் பணிகளில் ஒன்று. தங்கள் நாடு முழுவதும் உள்ள கடிகாரங்கள் எல்லாம் சரியான நேரத்தை ஒரே நேரத்தில் காட்ட வேண்டும் என்பதில் விடாப்பிடியானவர்கள் சுவிஸ்காரர்கள். கடிகாரங்களுக்கிடையே நேர ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதற்கான கண்டுபிடிப்புகளுக்கு மட்டும் 1901-க்கும் 1904-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐன்ஸ்டைனின் அலுவலகத்தில் இரண்டு டஜன்களுக்கும் அதிகமான காப்புரிமை வழங்கப்பட்டதாக ஒரு வரலாற்றாய்வாளர் கண்டுபிடித்திருக்கிறார்.

குறிப்பிட்ட மணி நேரத்தில் கடிகாரங்களிலிருந்து மற்ற கடிகாரங்களுக்கு சமிக்ஞை அனுப்பிவிட்டு அந்தக் கடிகாரங்களை நோக்கி ஒருவர் அதிஅதிவேகத்தில் பயணித்துச் சென்று பார்த்தால் அவர் என்ன தெரிந்துகொள்வாரோ அதற்கும், வேறு திசையில் அதிஅதி வேகத்தில் பயணித்தவருக்கு என்ன தோன்றுமோ அதற்கும் வேறுபாடு இருக்கும் என்பதைக் கற்பனைசெய்து பார்க்க ஐன்ஸ்டைனால் முடிந்தது.

இந்த யோசனையை அவர் வேறொருஎண்ணப் பரிசோதனையைக் கொண்டு பிறகு விளக்கினார். ஒரு ரயில்பாதையின் இரண்டு தொலைதூரப் பகுதிகளில் மின்னல்கள் தாக்குகின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். மின்னல் தாக்கிய இரண்டு இடங்களுக்கும் சரியாக நடுவில் ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இரண்டு மின்னல் தாக்குகளின் ஒளியும் அவரை ஒரே சமயத்தில் வந்துசேர்ந்தால் அந்த மின்னல் தாக்குகளெல்லாம் ஒரே நேரத்தில் நிகழ்ந்தவை என்று அவர் சொல்வார். அதே சமயத்தில் அந்த வழியே அவரைக் கடந்துசெல்லும் ரயிலின் நடுவே ஒரு பெண் இருந்துகொண்டு இதையெல்லாம் பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒளி அலைகள் வந்து சேரும்போது அந்த ரயில் செல்லும் திசையிலிருந்து வரும் ஒளி சற்று முன்னதாக வரும். ஆகவே, அந்தத் திசையில்தான் மின்னல் முதலில் விழுந்ததாக அந்தப் பெண் சொல்வார்.     

ரயில் பாதைக்கு ஓரமாக நின்றுகொண்டு பார்த்தவரைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் நிகழ்ந்ததாகத் தோன்றும் நிகழ்வுகள் ரயிலைப் பொறுத்தவரை அப்படித் தோன்றுவதில்லை,” என்று எழுதினார் ஐன்ஸ்டைன். இதில் வேடிக்கையான கட்டம் இப்போதுதான் வருகிறது: அந்த இருவரில் ஒருவர் சரி, இன்னொருவர் தவறு என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது, ஏனென்றால் ரயில்பாதையின் ஓரப் பகுதி நிலையாக இருந்து ரயில் மட்டுமே நகர்ந்துகொண்டிருக்கிறது என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. அந்த மனிதர், பெண், ரயில், பூமி, சூரியக் குடும்பம், நட்சத்திர மண்டலம், இன்ன பிற என்று இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றுக்கொன்று நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இப்படி இருக்கும்போது தான் மட்டும் பூரண ஓய்வு நிலையில் இருப்பதாகக் கோருவது யாராலும் முடியாது. ஆகவே, ‘உண்மையானஅல்லதுசரியானவிடை என்று ஏதும் கிடையாது. ‘ஒரே நேரத்தில்என்று சொல்வது சார்பான ஒரு விஷயம்தான், அதாவது அப்படிச் சொல்பவர் இயக்கத்தில் இருக்கிறாரா, ஓய்வு நிலையில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்தது அது.   

அப்படியென்றால் காலம் என்பது சார்பு நிலை கொண்டது என்றே அர்த்தமாகிறது. கிட்டத்தட்ட ஒளி வேகத்துக்கு அருகில் பயணித்தால் காலம் மெதுவாகிறது. இதையெல்லாம் உடனேயே கிரகித்துக்கொள்ள முடியவில்லை என்று நீங்கள் யாரும் வருந்த வேண்டாம். ஏனெனில், இந்தக் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே ஒரு பல்கலைக்கழகத்தில் அவருக்கு இயற்பியல் ஆசிரியர் பணி கிடைத்தது என்றால் எவ்வளவு மெதுவாக அந்தக் கோட்பாடு புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்!

காலமும் வெளியும் (வெளி = இடம்) ஒன்றுக்கொன்று சார்புடையவை என்ற விஷயத்தைச் சொன்னதால் அது சிறப்பு சார்பியல் கோட்பாடு என்று அழைக்கப்பட்டது. ஏனெனில், அது ஒரே ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொண்டது, அதாவது சீரான திசைவேகத்தில் ஒருவர் நகர்ந்துகொண்டிருப்பதைப் பற்றி. சுற்றிக்கொண்டிருக்கும் அல்லது திரும்பிக்கொண்டிருக்கும் அல்லது தனது வேகத்தை முடுக்கிக்கொண்டிருக்கும் ஒரு நபருக்கு மேற்கண்ட கோட்பாடைப் பொருத்திப்பார்க்க முடியாது. ஆகவே, எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுச் சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் உருவாக்குவதற்கு மேலும் பத்து ஆண்டுகள் ஆயின.


இந்த முறையும் எண்ணப் பரிசோதனைதான் ஐன்ஸ்டைனுக்குப் பாதையமைத்துக் கொடுத்தது. “பெர்ன் நகரில் உள்ள காப்புரிமை அலுவலகத்தில் எனது நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு நபர் தங்குதடையின்றி மேலிருந்து கீழே விழுந்துகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவர் தனது உடல் எடையை உணரவே மாட்டார்என்று ஐன்ஸ்டைன் தனது எண்ணத்தைப் பற்றி நினைவுகூர்கிறார். “என் வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோஷமான எண்ணம் அதுஎன்று பின்னால் அவர் நினைவுகூர்கிறார்.   
  
ஜன்னல்களற்றதும் தங்குதடையின்றி விழுவதற்கானதுமான அறை ஒன்றில் ஒரு நபர் மேலிருந்து கீழே விழுந்துகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் தரையில் போய் மோதிச் சிதறும் தருணம் வரும் வரையில் கீழே விழுந்துகொண்டிருக்கும் உணர்வு அவருக்கு ஏற்படவே ஏற்படாது என்று ஐன்ஸ்டைனுக்குத் தோன்றியது. அதற்குப் பதிலாக, ஈர்ப்புவிசையே இல்லாத அண்டவெளியின் ஏதோ ஒரு இடத்தில் ஒரு அறையில் மிதந்துகொண்டிருக்கும் உணர்வு அவருக்கு ஏற்படக் கூடும். தன்னை எடையற்று அவர் உணர்வார், தனது சட்டைப் பையிலிருந்து எடுக்க முயன்று அவர் தவற விடும் பொருள் கூட அவருக்கு இணையாக அவரோடு தங்குதடையின்றி மிதக்கும்.     

அடுத்தது, இதற்கு நேரெதிரான ஒரு கோணத்தில் ஐன்ஸ்டைன் பார்த்தார். அண்டவெளியில் ஈர்ப்புவிசையை உணர முடியாத ஒரு இடத்தில் மிதக்கும் மூடப்பட்ட அறையொன்றில் அந்த மனிதர் மிதந்துகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த அறைக்கு மேலாக இணைக்கப்பட்டிருக்கும் சங்கிலி மேல்நோக்கி இழுக்கப்படுகிறது என்றும் வைத்துக்கொள்வோம். மேல்நோக்கி இழுக்கப்படும் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்போது அந்த அறைக்குள் இருக்கும் நபர் தானும் அந்த அறையும் இருப்பது அதிக அளவில் ஈர்ப்புவிசையைக் கொண்டிருக்கும் ஒரு இடத்தில்தான் என்ற முடிவுக்கு வருவார்.

ஈர்ப்புவிசையால் உருவாகும் விளைவுகளும் முடுக்கத்தால் உருவாகும் விளைவுகளும் சமம் என்ற கருதுகோளை இப்படியாக ஐன்ஸ்டைன் முன்வைத்தார். அப்படியென்றால் இரண்டுக்கும் ஒரே காரணம் இருந்தாக வேண்டும். “ஈர்ப்பு விசையின் விளைவுகள் என்றும் முடுக்கத்தின் விளைவுகள் என்றும் நாம் முன்வைப்பவையெல்லாம் ஒரே அமைப்பின் விளைவுகள்தான்,” என்ற முடிவுக்கு ஐன்ஸ்டைன் வந்தார்.

இடமும் காலமும் தனித்த விஷயங்கள் அல்ல; மாறாக, ஒன்றாகப் பிணைந்தபடிகால-வெளி’ (Space-time) என்ற இழையை உருவாக்குபவை அவை என்று தனது சிறப்பு சார்பியல் கோட்பாட்டில் அவர் முன்பே காட்டியிருந்தார். இப்போது, அந்தக் கோட்பாட்டின் பொதுவடிவமானபொதுச் சார்பியல்கோட்பாட்டில் அந்தக்கால-வெளிகம்பளம் என்பது பொருட்களை வைத்திருக்கும் வெறும் கலனாக மட்டும் இல்லை. மாறாக, இரண்டு விதமான பரிமாணங்களைக் கொண்டதாக அது இருக்கிறது: நகர்ந்துகொண்டிருக்கும் பொருட்கள் அந்தக் கம்பளத்தை வளைக்கின்றன, அடுத்ததாக, அந்தக் கம்பளத்தின் வளைவுகள் பொருட்கள் எப்படி நகர வேண்டும் என்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன.   

மற்றுமொருஎண்ணப் பரிசோதனையைக் கொண்டு இதை நாம் மனக்கண்ணில் ஓட்டிப்பார்க்கலாம்: ஒரு மெத்தை மேல் கனமான இரும்புக் குண்டை உருட்டிவிடுவதாகக் கற்பனை செய்துபாருங்கள். அந்தக் குண்டு, மெத்தையில் வளைவை, அதாவது பள்ளத்தை, ஏற்படுத்தும். அடுத்ததாக அந்த மெத்தையில் சிறுசிறு பந்துகளை உருட்டிவிடுங்கள். அந்தப் பந்துகள் எல்லாம் இரும்புக் குண்டை நோக்கித்தான் ஓடும். அந்த இரும்புக் குண்டு ஏதோ மர்மமான விசை ஒன்றைக் கொண்டு பந்துகளை ஈர்த்துவிடவில்லை, அந்த இரும்புக் குண்டால் மெத்தை நடுவில் பள்ளமாக ஆகியிருப்பதால்தான். இதே விஷயத்தை நான்கு பரிமாணங்களைக் கொண்ட கால-வெளிக் கம்பளத்துக்கும் கற்பனை செய்துபார்க்க ஐன்ஸ்டைனால் முடிந்திருக்கிறது. அப்படிச் சிந்தித்துப் பார்ப்பதென்பது நமக்கெல்லாம் சிரமமான விஷயம்தான், அதனால்தான் அவர் ஐன்ஸ்டைனாக இருந்தார், நாம் நாமாக இருக்கிறோம்.

1915-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் தொடர்ந்து நான்கு வியாழக்கிழமைகளில் பெர்லினில் இருந்தஅறிவியல் துறைகளுக்கான பிரஸ்ஸிய அகாடெமியில் தனது பொதுச் சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைத்தார். நவம்பர் 25 அன்று தனது கடைசி உரையில் தனது சமன்பாடுகளை முன்வைத்தார். அதில் ஒன்றுதான் இது: Rμν - ½ Rgμν = 8 π G Tμν 


கால-வெளியின் வடிவத்தைப் பொருட்கள் எப்படி  வளைக்கின்றன என்பதைச் சமன்பாட்டின் இடதுபுறமுள்ள பகுதி சொல்கிறது. வளைக்கப்பட்ட இந்த இடம் எப்படி பொருட்களின் இயங்குதிசையைத் தீர்மானிக்கிறது என்பதை மேற்கண்ட சமன்பாட்டின் வலதுபுறமுள்ள பகுதி சொல்கிறது. இயற்பியலாளர் ஜான் வீலர் இதை அழகாகச் சொல்வார்: “எப்படி வளைய வேண்டும் எனபதை கால-வெளியிடம் பருப்பொருள் (matter) சொல்கிறதுபருப்பொருள் எப்படிப் பயணிக்க வேண்டுமென்பதை வளைந்த வெளி சொல்கிறது.”

இதன் அடிப்படையில் பார்த்தால் இன்னொரு விளைவாக ஈர்ப்பு விசை என்பது ஒளியை வளைத்தாக வேண்டும். இதையும் மற்றுமொரு எண்ணப் பரிசோதனையின் மூலமாக ஐன்ஸ்டைன் காட்டுகிறார்மேல்நோக்கி ஒரு அறை இழுக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இழுக்கப்படும் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதன் ஒரு சுவரிலுள்ள சிறு துளை வழியாக ஒரு லேசர் ஒளிக்கற்றை வருகிறது. மறுமுனையில் உள்ள சுவரை அந்த ஒளிக்கற்றை தொடும்போது அது தரைக்கு அருகில் உள்ள சுவர்ப் பரப்பாக இருக்கும், அறை மேல்நோக்கி ஏற்கெனவே போய்விட்டிருக்கிறதல்லவா! இப்போது ஒளி பயணித்திருக்கக் கூடிய தடத்தைத் துழாவிப் பார்த்தீர்கள் என்றால் அதன் தடம் வளைந்திருப்பது போல் தோன்றும். அதிகரிக்கும் வேகத்துடன் மேல்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அறைக்குக் குறுக்காக ஒளி கடந்ததால் நமக்கு அப்படித் தோன்றுகிறது. பொதுச்சார்பியல் கோட்பாட்டின்படி ஈர்ப்பு விசையின் விளைவும் முடுக்கத்தின் விளைவும் சமமாகவே இருக்கும். ஆதலால், ஈர்ப்புவிசை கொண்ட ஒரு புலத்தின் ஊடாகச் செல்லும் ஒளி வளைந்தாக வேண்டும்.                

இந்தக் கோட்பாட்டை நிரூபிப்பதற்கு அறிவியலாளர்களுக்கு நான்கு ஆண்டுகள் ஆயின. 1919, மே மாதத்தில் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது பிரிட்டிஷ் வானியலாளர் ஆர்தர் எடிங்டன் தலைமையிலான குழு ஒன்றுதான் இதை நிரூபித்தது. சூரியனுக்குப் பின்னாலிருந்து வரும் நட்சத்திரத்தின் ஒளி சூரியனின் ஈர்ப்புவிசையைத் தாண்டி வரும்போது எந்த அளவுக்கு வளைகிறது என்பதை அவர்களால் அளவிட முடிந்தது. அந்த அளவுகள் ஐன்ஸ்டைன் கோட்பாட்டை உறுதிப்படுத்தின.      

இதைப் பற்றி ஐன்ஸ்டைனுக்குத் தந்தி கொடுக்கப்பட்டது. அதை தனது மாணவி ஒருவரிடம் ஐன்ஸ்டைன் காட்டியிருக்கிறார். “இந்தக் கோட்பாடு தவறு என்று அந்த ஆய்வுகள் கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?” என்று அந்த மாணவி அவரிடம் கேட்டாள். “அப்படியென்றால் கடவுளுக்காக நான் வருத்தப்பட்டிருப்பேன். ஏனென்றால், இந்தக் கோட்பாடு அந்த அளவுக்கு உண்மையான ஒன்றுஎன்று பதிலளித்திருக்கிறார்.

நீங்கள் இவ்வளவு பிரபலமாக இருக்கக் காரணம் என்ன?” என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு ஐன்ஸ்டைனின் இளைய மகன் எதுவார்து அவரிடம் கேட்டான். கால-வெளிக் கம்பளத்தின் வளைவுதான் ஈர்ப்புவிசை என்ற தனது தரிசனத்தைத் தனது மகனுக்கு விளங்கவைக்கும் வகையில் ஒரு எண்ணப் பரிசோதனையையே அவனுக்கும் பதிலாக ஐன்ஸ்டைன் கொடுத்தார். “வளைந்த கிளையொன்றின்மீது பார்வையற்ற வண்டு ஒன்று ஊர்ந்துசெல்கிறது. தான் கடந்துவந்த பரப்பு உண்மையில் வளைவான பரப்பு என்பதை அது கவனிக்கவில்லை. அந்த வண்டு கவனிக்கத் தவறியதை அதிர்ஷ்டவசமாக நான் கவனித்துவிட்டேன்என்று ஐன்ஸ்டைன் சொல்லியிருக்கிறார்.

பார்வையற்ற வண்டு கவனிக்கத் தவறியதை கவனித்தது மட்டுமல்ல ஐன்ஸ்டைன் செய்தது, எண்ணப் பரிசோதனைகளின் மூலம் அதைக் கற்பனை செய்துபார்க்கவும் அவரால் முடிந்திருக்கிறது. பார்க்க முடியாததையெல்லாம் மனக்கண்ணில் ஓட்டிப்பார்க்கக் கூடிய திறன்தான் படைப்பாக்க இயல்பு பொருந்திய மேதைகளுக்கு அத்தியாவசியமானது. ஐன்ஸ்டைனே சொல்லியிருப்பதைப் போல, “அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறனே.”              
-    வால்ட்டர் ஐஸாக்ஸன். ஐன்ஸ்டைன், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோரின் வரலாற்று நூல்களின் ஆசிரியர்C தி நியூயார்க் டைம்ஸ், சுருக்கமாகத் தமிழில்: ஆசை. பொதுச்சார்பியலின் நூற்றாண்டையொட்டி வெளியான மொழிபெயர்ப்பு; நன்றி: இந்து தமிழ் திசை