Friday, June 3, 2016

சகஜமாகிப் போன நம் வன்முறை



ஷிவ் விஸ்வநாதன்
 ('தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 01-06-2016 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)

அதிகாரப்பரவலாக்கலை விரும்பும் நாடு இந்தியா. கிட்டத்தட்ட அதன் ஒவ்வொரு பகுதியையும் அது அரவணைக்கிறது. கொடுங்கோன்மை என்ற விஷயத்தைப் பற்றித்தான் இங்கே நான் பேசப்போகிறேன். எடுத்துக்காட்டாக, நம் காவல் நிலையங்களைப் பாருங்கள். ஹாப்ஸியன் இறையாண்மை நம்மை ஆள்வதற்கு எந்த அவசியமும் நமக்கு இல்லை. அரசியல் சித்தாந்தத்தில், ஹாப்ஸியன் சொல்லாடல்களின்படி விவாதிக்கப்படும் கோட்பாடு ஒன்று இருக்கிறது. தாமஸ் ஹாப்ஸ் என்ற தத்துவ அறிஞரின் கருதுகோள் என்னவென்றால் ஒரு ஆட்சியாளரின் இறையாண்மை என்பது அவருடைய குடிமக்களால் அவருக்கு வழங்கப்படும் ஓர் ஏற்பாடே. பதிலுக்கு அந்த ஆட்சியாளர் அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும். அந்த ஆட்சியாளர் தன் கடமையைச் செய்யத் தவறினால் மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதற்கான அவர்களின் திறனை மறுபடியும் பெற்று, புது ஒப்பந்தமொன்றை அவர்கள் உருவாக்குவார்கள் என்ற முடிவுக்கு தாமஸ் ஹாப்ஸ் வருகிறார். இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு போலீஸ்காரர் போதும், இந்தியாவின் எல்லாக் கொடுங்கோன்மைக்கும் உதாரணமாக. அவர்தான் உள்ளூர் வம்பர், உள்ளூர் பிரதமர், நீதிபதி; இவை எல்லாம் கலந்த கலவையும் அவரே. நம் சமூகத்தில் ஆட்சி நிர்வாகம் என்ற விஷயத்தை உருவாக்கும் கூறுகள் தொடங்கும் இடமும் முடியும் இடமும் காவல் நிலையம்தான். சட்டம் என்பதும் கொடுங்கோன்மையின் ஒருவித வடிவமே, அதற்கும் நீதிக்கும் உள்ள தொடர்பு மிகக் குறைவே. இந்தியாவின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் கொடுங்கோன்மைகளைப் பெற்றிருக்கும் நமக்குத் தனியாகச் சர்வாதிகாரிகள் வேண்டுமா என்பதுதான் நான் பேச வரும் விஷயம். இங்குள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் இந்தியா என்பது நம்பிக்கையை விதைக்கக் கூடிய ஒரு ஜனநாயகமாக இருக்கலாம், இங்கே அவர்களின் கனவுகள் நனவாவதற்கு வாய்ப்பு இருக்கலாம். ஆனால், பழங்குடியினருக்கும் நாடோடிச் சமூகத்தினருக்கும் தலித் மக்களுக்கும் சாதாரணப் பெண்களுக்கும் இந்தியா என்பது சர்வாதிகாரத்தனங்களின் பன்மைத்துவம் என்றே பொருள்படும்.
  
 வன்முறையின் புதிய உச்சம்

சட்டமும் சட்ட மீறல்களும் கைகோத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் எதிர்கொண்டிருக்கும் கொடுங்கோன்மையைவிட மிகவும் பீதியூட்டுவது எது தெரியுமா? வன்முறையின் தன்மையும் வன்முறை என்பது மிகவும் சகஜமான ஒன்று என்று ஆனதும்தான். நக்ஸல்களின் கலகங்கள், மதக்கலவரங்கள், சாதி அட்டூழியங்கள் போன்றவற்றின்போது கும்பல்கள் நிகழ்த்தும் வன்முறைகள் எப்போதாவது நிகழ்வதை நாம் பார்த்திருக்கிறோம், அவற்றைப் பற்றிப் படித்திருக்கிறோம். நான் இங்கே அவற்றைப் பற்றிப் பேசவில்லை. அதற்குப் பதிலாக, மூர்க்கமும் சித்திரவதையும் தினசரி விஷயமாக ஆகி, புதிய உச்சத்தை அடைந்திருக்கும், வன்முறையின் ‘சகஜத்தன்மை’ குறித்தே நான் பேச விரும்புகிறேன். 

குடிமக்கள் என்பவர்கள் யார், தேசத்தால் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைப் பெற்றிருப்போர் யார் என்றும், அப்படி இல்லாதவர்கள் யார் என்றும் போலீஸ் வரையறுத்து முத்திரை குத்தும் செயலிலிருந்தே வன்முறை கிட்டத்தட்ட ஆரம்பித்துவிடுகிறது. இந்த உலகத்தில் பழங்குடியினருக்கும் நாடோடிகளுக்கும் இடமே கிடையாது. சத்தீஸ்கர், பிஹாரின் சில பகுதிகள், காஷ்மீர், சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் சுமையால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மணிப்பூர் போன்றவை அல்ல. நடுத்தரவர்க்கத்து மக்கள்தான் உரிமைகளைப் பற்றியும், பசுமைத் தீர்ப்பாயங்கள், தேசிய மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் போன்றவற்றை அணுகும் செல்வாக்கைப் பற்றியும் பீத்திக்கொள்ள முடியும்.

மேல்நாட்டுக் கோட்பாடுகளின் வியாக்கியானங்களையெல்லாம் தாண்டி ஏதோ ஒரு ஆழமான விரிசல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதைத் தெளிவாகப் புரிய வைக்க சமீபத்திய சம்பவங்களைப் பற்றி சொல்லப் போகிறேன். காவல் நிலையம் என்பது கொடுங்கோன்மையைச் செயல்படுத்தும் நிர்வாக அலகு என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள். 

மூர்க்கங்களின் கதை
சத்தீஸ்கரைச் சேர்ந்த கவாசி ஹித்மியின் கதை இது. 2008 ஜனவரியில் நடந்தது இது. தங்களுக்கிருக்கும் துண்டு நிலத்தில் உழைத்துப் பிழைப்பை நடத்தும் பழங்குடியினப் பெண்கள் அவர்கள். பக்கத்து ஊரில் நடந்த ஒரு சந்தைக்குப் போயிருக்கிறார்கள். அவர்களுள் கவசி ஹித்மியும் ஒருவர். ரிப்பன்களும் வளையல்களும் வாங்குவதற்காகக் சந்தையை வளையவந்திருக்கிறார் கவசி. சந்தையில் சுற்றித் திரிந்துவிட்டு தாகத்தைத் தணித்துக்கொள்வதற்காக அந்தப் பெண்கள் குழாயடியைத் தேடியிருக்கிறார்கள். தண்ணீர் குடிப்பதற்காக கவசி குனிந்தபோது அவள் மீது ஒரு கை விழுந்து அவளைப் பிடித்து இழுத்திருக்கிறது. திரும்பி பார்த்தால் ஒரு போலீஸ்காரர். அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு, சந்தைக்கு வெளியே நிறுத்தப்பட்ட போலீஸ் வேனுக்கு அவர் சென்றிருக்கிறார். அவளின் கைகால்களைக் கட்டி வேனுக்குள் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வேனை ஓட்டிச் சென்றார்/. அதற்கப்புறம் அந்தப் பெண் என்ன ஆனாள் தெரியுமா? நாகரிகமாகச் சொல்வதென்றால், ‘காவலர்களின் மனைவி’யாக ஆனாள். ஒவ்வொரு காவல் நிலையமாக மாற்றி மாற்றி அவளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தினார்கள். அவள் இறந்துபோய்விடக் கூடும் என்று சில போலீஸ்காரர்கள் அஞ்சியதால், விஷயம் வெளியே தெரிந்துவிடாமல் தடுப்பதற்காக அந்தப் பெண்ணைக் கைதுசெய்தார்கள். அதற்குப் பிறகு சத்தீஸ்கர் பொதுமக்களுக்கான சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு பொய்க் குற்றச்சாட்டு அவள் மீது சுமத்தப்படுகிறது. மத்திய ரிசர்வ் படையினர் 23 பேர் கொல்லப்பட்ட குற்றம் தொடர்பாக போலீஸார் அந்தப் பெண் மீது குற்றம் சுமத்தினார்கள். மாஜிஸ்திரேட்டும் அவளை ஜக்தல்பூர் சிறையில் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.     

சிறையில் அவளைக் கொடூரமான சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தியதால் அவளுக்குக் கருப்பை இறக்கம் ஏற்பட்டது (இருக்கும் இடத்தை விட்டுக் கருப்பை கீழே இறங்குதல்). வலி தாங்க முடியாமல் தானே கருப்பை அகற்றம் செய்துகொள்ளலாம் என்று சக சிறைவாசியிடம் பிளேடு கேட்டிருக்கிறாள். அதனால் ரத்தப்போக்கும், அந்தப் பெண்ணின் அலறலும் மேலும் அதிகமாக மற்ற கைதிகள் சிறை அதிகாரிக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். அந்த அதிகாரி அவளைப் பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசென்றார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் மறுபடியும் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். ஆதிவாசி ஆசிரியரான சோனி சோரியும் அந்தச் சமயத்தில் சிறையில் இருந்திருக்கிறார். அவர்தான் ஹித்மியின் ரட்சகராக மாறியிருக்கிறார். சோரியும் காவல் கொட்டடியில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்தான். அவருடைய விடுதலைக்குப் பிறகு மனித உரிமைச் செயல்பாட்டாளர்களிடம் ஹித்மியின் நிலையைப் பற்றி சோரி தெரிவித்திருக்கிறார். அவர்களும் அவளுக்கு வேண்டிய சட்ட உதவியைச் செய்தார்கள். ஒருவழியாக, 2015 மார்ச் பிற்பகுதியில், ஹித்மி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லி நீதிமன்றம் அவளை விடுதலை செய்தது.

இதுபோன்ற கதைகள் இலக்கிய விமர்சகர் கணேஷ் என். தேவியால் வெளியுலகத்துக்கு சொல்லப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் போலீஸின் எளிய இலக்குகளாகப் பழங்குடியினர் ஆளாவது பற்றியும்; போலீஸ்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்குப் பழங்குடியினரைக் கைதுசெய்து, தங்கள் இஷ்டத்துக்கு விடுவிப்பது குறித்தும் பல உண்மைக் கதைகளை அவர் நமக்குச் சொல்கிறார். 


எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான மாகாஸ்வேதா தேவி பிஹாரிலும் மேற்கு வங்கத்திலும் நடைபெறும் வன்முறைகளைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். இவற்றில் பெரும்பாலானவை பழங்குடிகள் மீது நடத்தப்படும் வன்முறைகள். கபடவேடம் போடும் சமூகம் நம்முடையது. பழங்குடியினரையும் பூர்வகுடி மக்களையும் மேலைநாட்டினர் அழித்தொழித்ததுபற்றி நம் அறிஞர்களும் அறிவுஜீவிகளும் விலாவரியாகப் பேசுவார்கள். ஆனால், நம் மக்கள் மீது அதுபோன்ற வன்முறையை நாமே நிகழ்த்துவது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். சட்டத்தின் பார்வைக்கே இது போன்ற வன்முறைகள் பெரும்பாலும் வருவதில்லை என்பது வருந்தத் தக்க விஷயம். 

இயல்பாகத்தான் இருக்கிறதா நம் சமூகம்?
இன்னொரு உதாரணத்தையும் சொல்ல விரும்புகிறேன். கேரளத்தில் பெரும்பாவூரில் ஏப்ரல் 28 அன்று ஜிஷா என்ற தலித் பெண், சட்ட மாணவி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது மிகக் கொடூரமான வன்முறை நிகழ்த்தப்பட்டிருப்பதாக அவரது பிரேதப் பரிசோதனை தெரிவிக்கிறது. அதைவிட மோசம், காவல் துறையின் அலட்சியப் போக்குதான்; இதைவிட வேறெந்த உதாரணமும் காட்ட முடியாது! 2012-ல் புதுடெல்லியில் மாணவி ஒருவர் மீது மிகவும் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்முறையோடு ஜிஷா விவகாரமும் தற்போது ஒப்பிடப்படுகிறது.  


இதுமாதிரி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்ற வன்முறைகளைப் புரிந்துகொள்வதில் சட்டத்துக்கு இருக்கும் எல்லையைப் பற்றி ஒரு வகையில் நம்மால் உணர முடிகிறது. இன்னொரு வகையிலோ, இதுபோன்ற கொடூரங்களை இந்தச் சமூகம் பார்க்கத் தவறுவது எதனால் என்று நாம் கேள்வி கேட்கிறோம். மேலும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்துக்கொண்டிருப்பதால் இதெல்லாம் வழக்கத்துக்கு விரோதமானது என்று சொல்லி நிராகரித்துவிடுகிறோம். இதையெல்லாம் இயல்பானது என்று கருதவோ இவற்றை அலட்சியப்படுத்தவோ சமூகம் செய்யுமானால், நம் சமூகமே இயல்பானதுதானா என்று ஆச்சர்யம் நமக்கு ஏற்படுகிறது.  

உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் அப்பால் செல்லும் கேள்வி இது. சமூகம் என்பது எதுவோ அதை உருவாக்கக்கூடிய அடிப்படைகளை நோக்கி ஆழமாகச் செல்லும் கேள்வி இது. மிகவும் அடிப்படையான உணர்வுகளும், ரொம்பவும் சகஜமாக ஆகிப்போய்விட்ட வன்முறையும் சேர்ந்து புதுவிதமான ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனவா? இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றி யோசிக்கவும் ஒரு கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் வைத்துப் பார்க்கவும் நமது சட்டத்தின் தற்போதைய வழிமுறைகள் போதுமானவையாக இருக்கின்றனவா?

இதுபோன்ற நிகழ்வுகள் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது குமட்டிக்கொண்டுவருகிறது, மனதோ திமிறிக்கொண்டு எழுகிறது. எனினும், ஊடகங்கள் இதுகுறித்து அடுத்தடுத்து அக்கறை காட்டுவதில்லை என்பதையும் உணர முடிகிறது. சமூகத்தின் நினைவில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து குவிந்துகொண்டே வருவதால் இவற்றை மக்களால் ஜீரணிக்க முடியாமல் போவது போல்தான் தெரிகிறது. இது போன்ற சம்பவங்களை உள்வாங்கும்போது நாம் இவற்றை நிராகரிப்பதும், அலட்சியம் செய்வதும் ஒருங்கே நிகழ்கிறது. ஒரு பேராசிரியராக இது போன்ற சம்பவங்களை வகுப்பறையில் விவாதித்தபோதல்லாம் பல முறை எனது மாணவர்கள் அழுதது என் நினைவுக்கு வருகிறது. சமூகமோ பாராமுகம் காட்டுகிறது.    

மேற்கிலிருந்து சில பாடங்கள்
இதுபோன்ற சம்பவங்களெல்லாம் ஆழமான ஒரு பிரச்சினையின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்பதால்தான் நான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறேன். ஒரு தேசமாக, இந்தியா மிகவும் வன்முறையானது, எனினும் இது போன்ற சம்பவங்களை அது அலசிப்பார்க்க விரும்பவில்லை. ரனை ஜரார்டு (பிரெஞ்சு வரலாற்றாசிரியர் இலக்கிய விமர்சகர், சமூக அறிவியலுக்கான தத்துவவாதி), ஹனா ஆரென்ட் (ஜெர்மனியில் பிறந்த அமெரிக்க அரசியல் கோட்பாட்டாளர், தத்துவவாதி) போன்றோ, சமூகவியல் கோட்பாட்டுக்கும் தத்துவத்துக்குமான ஃப்ராங்பர்ட் இயக்கம் போலோ நமது சமூகவியல் அறிவியலாளர்களிடையே ஒன்றும் நிகழவில்லை. இவர்களெல்லாம் வன்முறையின் வேர் நோக்கிச் சென்று அதை நம் வாழ்க்கையில் அது எப்படி சகஜமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பதை இணைத்துப்பார்த்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் ஆதாரங்களையும் கோட்பாட்டையும் பின்தொடர்ந்துசென்று தீமைக்குப் புது வரையறை கொடுப்பதற்கும், மொழியில் இதை விளக்க புதுப் பாதையமைக்கவும் துணிவும் உறுதியான நம்பிக்கையும் வேண்டும். சகஜமாகிவிட்ட வன்முறை தொடர்பாக ஆரென்ட் அப்படித்தான் அலசியிருக்கிறார்.   

‘அய்ஷ்மன் இன் ஜெருசலேம்: எ ரிப்போர்ட் ஆன் த பேனாலிட்டி ஆஃப் ஈவில்’ என்ற ஆரென்டின் புத்தகத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும். ஆரென்ட் கொடுத்திருக்கும் துணைத் தலைப்பிலிருந்து ‘வழக்கமானதொன்றாக ஆன தீமை’ என்ற வாசகம் மிகவும் பிரபலமானது. அதுதான் அந்தப் புத்தகத்தின் இறுதி வாசகங்களும் கூட. யூத இனஅழிப்பில் ஈடுபட்டதற்காக 1962-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆட்டோ அடால்ஃப் அய்ஷ்மன் என்பவர் சாதாரண மனிதரே என்றும், அவரிடம் காணப்பட்டது போன்ற சாதாரணத் தன்மைதான் இனஅழிப்புக்கான விதையைத் தூவியது என்றும் ஆரென்ட் விளக்கியபோது எளிய யூதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாஜிக்களின் வன்முறைக்கு வேர் எது என்பதை அறிவியல் முறைப்படி ஸிக்மூந்த் பவ்மேன் என்ற போலிஷ் சமூகவியலாளர் தனது ‘மாடர்னிட்டி அண்டு த ஹோலோகாஸ்ட்’ என்ற நூலில் காட்டியபோது பெரும் அதிர்வு ஏற்பட்டது. யூத இன அழிப்பு என்பது நவீன அறவுணர்வுக்கு போட்டியாக நிகழ்ந்த கொடூரமெல்லாம் கிடையாது, நவீன காலத்தின் தர்க்கக் கோட்பாடுகளோடு பொருந்திப் போவதுதான் என்று உசுப்பேற்றும் விதத்தில் அவர் வாதிட்டார். அதுபோன்ற சிந்தனைகள் நம்மிடையே வேண்டும்; கதை சொல்வதைப் போன்ற விவரணைத் திறனை அது போன்ற சிந்தனைகள் கொண்டிருக்க வேண்டும், மேலும் துணிவு மிக்க சமூக அறிவியல், அல்லது தார்மீகக் கண்ணோட்டம் போன்றவற்றைக்  கண்டறியும் வகையில் அது இருக்க வேண்டும்; வன்முறையைப் பற்றி விளக்குவதாக, இந்தியச் சமூகத்தில் சட்டத்தின் எல்லைகளை விளக்குவதாக அது இருக்க வேண்டும். இதுபோன்ற அறம் சார்ந்த, தத்துவார்த்த சிந்தனைத் திறனின் வேர்கள் இல்லையென்றால் எந்த ஜனநாயகமும் நீடிக்க முடியாது.

 - ஷிவ் விஸ்வநாதன், ஜிண்டால் சட்டக் கல்லூரியின் பேராசிரியர். சுருக்கமாகத் தமிழில்: ஆசை 
- நன்றி: ‘தி இந்து’, ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/7FWs8i

No comments:

Post a Comment