Tuesday, January 31, 2017

என்றும் காந்தி: 1- காந்தி என்றொரு எளிமையான கோட்டோவியம்!


ஆசை

காந்தியின் உருவத்தை என்றாவது வரைந்துபார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஓவியம் வரையத் தெரியவில்லை என்றாலும் எளிமையான இந்தக் கோட்டோவியத்தை முயன்றுபாருங்கள்! ஒரு முட்டை, அதன் இரு பக்கங்களிலும் சற்றே ‘வி’ வடிவத்தில் விரிந்த காதுகள். சற்று விடைத்தது போன்ற மூக்கு, முக்கியமாக ஒரு மூக்குக்கண்ணாடி, அப்புறம் பொக்கை வாய்… என்ன மூச்சு முட்டுகிறதா? இதுவே சிரமமாக இருக்கிறதா? சரி விடுங்கள். உங்களுக்கு காந்தி படம் வரைய வேண்டும் அவ்வளவுதானே! அந்தக் கால பாணியில் ஒரு மூக்குக் கண்ணாடியை வரையுங்கள் போதும். உங்களுக்கு காந்தி கிடைத்துவிடுவார். ரூபாய் நோட்டுக்களிலும், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் விளம்பரங்களிலும் காந்தியை உருவகப்படுத்தும் கண்ணாடியைப் பார்த்திருக்கிறோம் அல்லவா! அதுபோல்.

எளிமையான ஒரு கண்ணாடி இங்கு காந்தியை உருவகப்படுத்துகிறது. வளைந்த ஒரு கைத்தடியை மட்டும் வரைந்தால் பெரியார் என்று கண்டுகொள்வோமல்லவா! காந்தியையும் பெரியாரையும் அறிந்திராதவர்களுக்கு அவை வெறும் கண்ணாடியும் கைத்தடியும் மட்டுமே. நமக்கு மட்டும் இந்தப் பொருட்கள் காந்தியாகவும் பெரியாராகவும் பொருள்படுகின்றனவே? ஏனென்றால் அந்தப் பொருட்களைப் பயன்படுத்திய மனிதர்களின் சித்தாந்தங்களை அந்தப் பொருட்களின் மீது நாம் ஏற்றிப்பார்க்கிறோம். இவ்வாறாக, அவை குறிப்பிட்ட அரசியல் செயல்பாடுகளின் சின்னங்களாக ஆகிவிடுகின்றன. அப்படித்தான் காந்தி தன் அரசியல் செயல்பாடுகளின் சின்னமாகத் தன் எளிமையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

மாறுவேடப் போட்டிகளுக்கு உதவுபவர்
காந்தியின் உடுத்தல் பாணி எவ்வளவு எளிது என்பதை யாருக்கும் சொல்லத் தேவையில்லை. இதற்கு ஓர் உதாரணம். சமீபத்தில், எல்.கே.ஜி. படிக்கும் எனது மகனின் பள்ளியில் குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக, தலைவர்கள் வேடத்தில் குழந்தைகளை அழைத்துவரச் சொல்லியிருந்தார்கள். இந்தத் தகவலை, என் மகனைப் பள்ளிக்குக் கிளப்பும் நேரத்தில்தான் என் மனைவி என்னிடம் கூறினார். என்ன செய்வது? பாரதியார் வேடத்துக்கு கோட்டு, தலைப்பாகை வேண்டும், நேதாஜி வேடத்துக்கு ராணுவ உடை வேண்டும்! பேசாமல் காந்தி வேடத்தைப் போட்டுவிடலாமா என்று கேட்டார் என் மனைவி. வழக்கமாக எல்லோரும் தேர்ந்தெடுக்கும் வேடம் என்பதால் வேண்டாம் என்று முதலில் நினைத்தாலும் வேறு வழியில்லாமல் ஒரு வெள்ளைத் துண்டை அரையாடையாகக் கட்டிவிட்டு, மேலே சட்டையில்லாமல் ஒரு சிறிய துண்டை சால்வை போல் போர்த்திவிட்டோம். சிறுவர் விளையாட்டுக் கண்ணாடி காந்தியின் கண்ணாடி பாத்திரத்தை ஏற்றது. கிளப்பிக்கொண்டு புறப்பட்டுச் சென்றோம். போகும் வழியில்தான் காந்தியின் கைத்தடி நினைவுக்கு வந்தது. வழியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு சாலையோரத்தில் பட்டுக் கிடந்த சீமைக் காட்டமணக்குச் செடியின் குச்சியை உடைத்துக்கொண்டோம். இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்போல் இன்ஸ்டண்ட் காந்தி தயார்! பள்ளிக்குச் சென்று பார்த்தால் பாரதி, நேதாஜி, நேரு, எல்லாரும் இருக்கிறார்கள். அவர்களின் தலைவரை நாங்கள் கொண்டுவந்தோம். ஆக, மாறுவேடப் போட்டிக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோருக்குத்தான் தெரியும் காந்தியின் உடுத்தல் பாணி எவ்வளவு எளிமை என்று!

இதனால் மற்ற தலைவர்களின் ஆடைகளையோ தோற்றத்தையோ குறை சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தோற்றம்; அதன் பின்னே ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கும். பெரும்பாலான ஏழைகள் கோவணம் கட்டிக்கொண்டிருக்கத் தனக்கேன் சீமான் உடை என்று அதைத் துறந்தது காந்தியின் அரசியல் நிலைப்பாடு. ஆனால், வசதிகளும் வாய்ப்பும் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்து இந்தியாவின் பெரும் மேதைகளுள் ஒருவராகவும் புரட்சியாளராகவும் உருவான அம்பேத்கரோ கோட்டும் சூட்டும் அணிந்தது அரையாடை உடுத்தியிருக்கும் சக இந்தியர்களை மிடுக்கான, நவீனத் தோற்றத்துக்கு உயர்த்தும் ஒரு செயல்பாட்டின் அடையாளம். இரண்டு செயல்பாடுகளும் மாறுபட்டவை போலத் தோன்றினாலும், அவற்றின் நோக்கம் ஒன்றே! சக மனிதர்களின் நிலை மேல் உள்ள அக்கறை!

அரசியல், ஆன்மிகச் செயல்பாடு
காந்தியின் தோற்றத்திலுள்ள எளிமையே எல்லோரையும் ஈர்க்கும் முதல் காரணி. இந்தியர்களுக்குப் பொதுவாகத் துறவிகள் மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. துறவிகள், ஆன்மிகவாதிகள் என்பதனால் மட்டுமல்ல அந்த ஈர்ப்பு. எல்லாவற்றையும் துறந்துவிட்டு எளிமையாக வாழும் அவர்கள் வாழ்க்கை மீது ஏற்படும் ஈர்ப்பு என்றும் கூட அதைச் சொல்லலாம். அதைப் போல மிகவும் வசதி படைத்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் ரொம்பவும் எளிமையாகக் காட்சியளித்தால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டுவிடும். ‘எவ்வளவு பெரிய பணக்காரர், அவர் போய் பேருந்தில் வருகிறாரே?’, ‘ஒரு மாநிலத்தின் முதல்வர் இவர். அவர் டி.வி.எஸ். ஃபிஃப்டியில் வருகிறாரே?’ என்றெல்லாம் மக்கள் ஒருசிலரை வியந்ததுண்டு. அவர்கள் ஊழல் செய்பவர்களா, வரிகட்டாதவர்களா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். தோற்றத்தின் எளிமையே அவர்களுக்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால், தோற்றத்தின் எளிமை ஏற்படுத்தும் ஈர்ப்பைத் தக்க வைக்கும் வாழ்க்கையை எல்லோரும் வாழ்கிறார்களா என்று சொல்ல முடியாது. காந்தியோ உண்மையைக் கொண்டு அந்தத் எளிமையை வலுவாக்கினார். அதுவே அவரது நீடித்த செல்வாக்குக்குக் காரணம். காந்தியின் எளிமை மற்றவர்களுடையது போலல்ல, அது உள்ளும் புறமும் காணப்படும் எளிமை. தன்னை மிக மிக எளியவராகக் கருதிக்கொண்டதனால் ஏற்பட்ட எளிமை. ஒரே சமயத்தில் அரசியல் செயல்பாடாகவும் ஆன்மிகச் செயல்பாடாகவும் அமைந்த எளிமை அது.

'அரையாடைப் பக்கிரி'யும் மாமன்னரும்
உலகெங்கும் பல நாடுகளில் மன்னராட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது. மக்களாட்சி தத்துவம் மிக மிக மெதுவாகவே அரும்புவிட்டுக்கொண்டிருந்தது. மன்னர்கள்தான் கடவுளர்களாகவும் மக்கள் அவர்களது அடிமைகளாகவும் நடத்தப்பட்டிருந்த நிலையிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் விடுபட்டிருக்கவில்லை. அந்தச் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு எளிய மனிதர், 'அரை நிர்வாணப் பக்கிரி' என்று அந்நாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்ட்டன் சர்ச்சிலால் இகழப்பட்ட ஒருவர், அதே அரை நிர்வாணக் கோலத்துடன் இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜை நேருக்கு நேராக அவரது அரண்மனையில் போய்ச் சந்தித்தது எளிமையின் ஒப்பற்ற அரசியல் செயல்பாடில்லாமல் வேறென்ன? வின்ஸ்ட்டன் சர்ச்சில் காந்தியைப் பற்றிச் சொன்னது, இந்தியாவில் காந்தி தலைமையிலான சுதந்திரப் போராட்டம் தனது அரசாண்மையைக் கேள்விகேட்டது போன்றவற்றால் காந்தியைச் சந்திப்பதைச் சற்றும் விரும்பாமல்தான் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இருந்தார். ஆனால், அரசியல் காரணங்களால் காந்தியை சந்தித்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. அந்தச் சந்திப்பு குறித்துப் பத்திரிகையாளர்கள் காந்தியின் கேள்விகள் கேட்டனர். 'இப்படி அரையாடையுடன் மன்னரைப் போய்ச் சந்திப்பதில் உங்களுக்குத் தயக்கமில்லையா?' என்று ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு காந்தி சிரித்துக்கொண்டே, 'எனக்கும் சேர்த்துதான் மன்னரே உடையணிந்திருந்தாரே?' என்று கேட்டார்.

செலவு வைக்கும் எளிமையா?
தோற்றத்தில் மட்டுமல்ல, வாழ்க்கை முறையிலும் அவர் அதே எளிமையைக் கடைப்பிடித்தார். அவர் அறையில் அநேகமாக எந்த அறைக்கலனும் இருக்காது. சுவரில் ஒரு ஏசு படம் தொங்கிக்கொண்டிருக்கும் அவ்வளவுதான். உடைமையும் அதிகம் கிடையாது. தனக்கென்று ஏதும் சேர்த்துவைப்பது பாவம் என்று கருதினார். ரயில்களிலும் கப்பல்களிலும் மூன்றாம் வகுப்பிலேயே பயணித்தார். ரயில் பயணங்களின் போது காந்தியின் பாதுகாப்புக்காக அவருக்குத் தெரியாமல் ஒரு பெட்டி முழுவதிலும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து கட்சி அனுப்பும். இதனால்தான், ‘உங்கள் எளிமைக்கு நிறைய செலவாகிறது காந்திஜி’ என்று சரோஜினி நாயுடு போன்றவர்கள் காந்தியைக் கேலிசெய்வார்கள். ஆரம்பத்தில் நகைச்சுவைக்காகப் சொல்லப்பட்ட இந்த விஷயமே பிற்பாடு அவர் மீது அவதூறு செய்வதற்கான விஷயங்களுள் ஒன்றாக ஆகிப்போனது. காந்தியின் இயல்பே மூன்றாம் வகுப்பு எளிமைதான் என்றாலும் மூன்றாம் வகுப்பில் சென்றால்தான் ஏழை எளிய மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் வாழ்க்கைச் சிரமங்களை அறிந்துகொள்ள முடியும் என்பதும் கூட ஒரு நோக்கம்! கூடவே, தான் மூன்றாம் வகுப்பில் செல்வதன் மூலம் தனது செல்வந்தத் தொண்டர்கள் லட்சக் கணக்கானோரையும் அப்படிச் செல்ல வைத்தது, கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவரது எளிமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!

காந்தி காலத்திலும் சரி அதற்குப் பிறகும் சரி லட்சக் கணக்கான செல்வந்த காந்தியர்கள் தங்கள் சொத்துசுகங்களை உதறிவிட்டு காந்தியைப் போலவே எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டிருக்கின்றனர். காந்தியின் தொண்டர்களிடம் மட்டுமல்ல, அவரிடமிருந்து மாறுபட்ட கருத்தியல் கொண்டவர்களிடமும் அவரது எளிமை ஆதிக்கம் செலுத்தியிருப்பதற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஜீவா தொடங்கி இன்றைய நல்லகண்ணு வரை உதாரணம் காட்டலாம். வண்ணத்துப்பூச்சி விளைவுபோல இது காந்தி விளைவு!
(நாளை...)
 நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/QOSqhq)

1 comment:

  1. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....பலருடைய வாழ்வில் காந்தியின் தாக்கத்தை உணரமுடியும், நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ.

    ReplyDelete