Saturday, March 18, 2017

முடிந்தவரை சாதித்திருக்கிறது திமுக - திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு பேட்டி


ஆசை
திராவிட இயக்கத்தின் முக்கியமான வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் க. திருநாவுக்கரசு (வயது 75). ‘நீதிக்கட்சி வரலாறு’, ‘திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை’ முதலான முக்கியமான வரலாற்று நூல்களின் ஆசிரியர். இவர், தற்போது திமுகவின் வரலாற்றை விரிவாக ஆய்வுசெய்து ‘திமுக வரலாறு’ (நக்கீரன் வெளியீடு) என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடவிருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து…

திராவிட இயக்க வித்து உங்களுக்குள் விழுந்தது எப்படி, எப்போது?
என் ஆரம்பக் கல்வி ஆசிரியர் முனுசாமி (அன்பரசு) கூறிய புத்தர் கதையும் என் குடும்பச் சூழலும் இதற்கு வித்திட்டன. உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறபோதே அறிஞர் அண்ணாவை எங்கள் உறவினர் வீட்டில் பார்த்தது மேலும் உந்துதலைக் கொடுத்தது. ‘அய்யா கட்சி வேறில்லே, அண்ணா கட்சி வேறில்லே, எல்லாம் ஒன்றுதானுங்க, ஏமாந்து போகாதீங்க’ எனும் மேடைப் பாடல், உயர் சாதியினர் சூத்திர, தாழ்த்தப்பட்ட சாதிகளை நடத்தும் மேலாண்மைக் காட்சியைக் கண்டது, இவையெல்லாம் என்னுள் திராவிட இயக்க வித்து ஊன்றுவதற்குக் காரணமாயிற்று.

இடதுசாரி இயக்கங்களுக்கு இருப்பதுபோல் அதிக அளவில் திராவிட இயக்கங்களுக்கு வரலாற்றாசிரியர்கள் இல்லையே, ஏன்?
இடதுசாரி இயக்கம் என்பது இந்தியவயமானது மட்டுமல்ல; அது உலகளாவியதும் கூட! திராவிட இயக்கத்தில் அந்த அளவுக்கு இருக்க முடியாது. வாழ்நிலைக்கு ஏற்பத்தான் மெய்ம்மையும் இருக்கும். அந்த வகையில் திராவிட இயக்கத்துக்கு வரலாற்று ஆசிரியர்கள் அமைந்திருக்கிறார்கள். தேவை கருதி அதன் எண்ணிக்கை கூடும்.

‘நீதிக்கட்சி வரலாறு’ போன்ற நூல்களின் தொடர்ச்சியாக இப்போது ‘திமுக வரலாறு’. இந்தத் தொடர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நீதிக்கட்சி என்பது திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் கருத்தியல் மையம். அங்கிருந்துதான் சமூகநீதி கால்கோள் கொண்டு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. சம்ஸ்கிருத எதிர்ப்பைத் திராவிட இயக்கத் தந்தை டாக்டர் சி. நடேசனார் அன்றே சட்டமன்றத்தில் பேசிப் பதிவுசெய்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தின் மாண்பைத் தமிழர் களுக்கு நினைவூட்டியிருக்கிறார். கருணாநிதி ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ எனும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வித்தாக 1917-ம் ஆண்டில் நீதிக்கட்சியின் அதிகாரபூர்வமான ‘திராவிடன்’ ஏடு எடுத்துத் தந்த கொள்கை முடிவைச் சுட்டிக்காட்டலாம். இப்படி ஒரு தொடர்ச்சி இருப்பதால்தான் ‘திமுக வரலாறு’ படைக்க முடிகிறது. ஆகவே தான் திமுகவை திராவிட இயக்கத்தின் உண்மை யான அரசியல் பிரிவு என்று நான் கூறுகிறேன்.

‘திமுக வரலாறு’ நூலின் முன்னோடி முயற்சிகளென்று எவற்றைக் கருதுகிறீர்கள்?
எனக்கு முன்பாகவே ‘திராவிட இயக்க வரலாறு’ எனும் பெயரில் முரசொலி மாறன் முதல் தொகுதியை எழுதி வெளியிட்டிருக்கிறார். நாவலர் இரா. நெடுஞ்செழியன் ‘திராவிட இயக்க வரலாறு முதல் தொகுதி’ என்று எழுதினார். இதன் தொடர்ச்சி என்று இருவரும் எழுதவில்லை. எழுத்தாளர் கே.ஜி. இராதா மணாளன் ‘திராவிட இயக்க வரலாறு’ என்று எழுதினார். இவையன்றி, ‘பிட்டி தியாகராயர் முதல் கலைஞர் வரை’ எனும் தலைப்பில் மாலைமணி பி.எஸ். இளங்கோ எழுதியிருக்கிறார். திமுக வரலாறு என்ற பெயரிலும் டி.எம். பார்த்தசாரதி எழுதியிருக்கிறார். இவற்றையெல்லாம், திமுக வரலாறு எழுதுவதற்கு முன்னோடி முயற்சிகளென்று குறிப்பிடலாம்.

கிட்டத்தட்ட 70 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திமுகவைப் பற்றி வரலாறு எழுதுவது அவ்வளவு சாதாரண வேலையில்லை. இந்தப் பணியில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள், சந்தோஷங்கள், வருத்தங்கள், மனநிறைவு, விடுபடல்கள் என்னென்ன?
நீங்கள் சொல்வதுபோல் இது சாதாரணப் பணி இல்லைதான். நான் இப்போது எழுதி வெளியிடும் நூல் 70 ஆண்டு கால வரலாறு அல்ல. 1949 முதல் 1969 வரை - அதாவது 20 ஆண்டு கால வரலாறு மட்டுமே. இந்த 20 ஆண்டு கால வரலாறு மட்டும் சுமார் 3,000 பக்கங்கள் வருகின்றன. இதில் மூன்று தொகுதிகள் மட்டும் 1,840 பக்கங்கள் கொண்டவை. இவை, வரும் 25-ம் தேதி மு.க.ஸ்டாலினால் வெளியிடப்படவிருக்கின்றன. அடுத்த மூன்று தொகுதிகள் இன்னும் ஆறு மாதங்களில் வெளியிடப்படும்.
இந்தப் பணியில் எதிர்கொண்ட அறைகூவல் கள் நிறைய உண்டு. ஒருவரிடம் ஒரு குறிப்பைப் பெறுவதற்காகப் பல நாட்கள் சென்றுவர வேண்டும். சிலர், பழைய ஏடுகளை எதிரே வைத்துக்கொண்டு ‘இது அது இல்லை’ என்று சொல்வார்கள். சிலர் முக்கியமானவர் களாகவும் செல்வாக்கு உடையவர்களாகவும் கூட இருப்பார்கள்; அவர்களைப் பற்றிச் சொன்னால் நாடு அறிந்துகொள்ளும்; இதை நான் சொன்னதாக எழுதிவிடாதீர்கள் என்று சொல்வார்கள். ஆனால், அந்த நிகழ்வை ஒப்பிட்டுப் பார்ப்பேன்.
உண்மைதானா என்று ஆராய்வேன். அந்த ஆய்வில், தெளிவும் ஆதாரமும் கிடைக்குமானால் பதிவு செய்வேன். அப்போதுதான் முழு மன நிறைவு ஏற்படும். சில தரவுகள் நம்பிக்கை இல்லாமல் இருக்கும். ஆதாரம் இருக்காது, காழ்ப்பின் காரணமாக ஒன்றைக் கிளப்பிவிட்டிருப்பார்கள். அவற்றையெல்லாம் தவிர்த்துவிடுவேன். முழுமையான ஆய்வும் நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிற செய்திகளைத் தனியே எடுத்து வைத்துவிடுவேன். அவை விடுபடல்களாகவே இருக்கும்.

திமுகவைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? இயக்கச் சார்புக்கும் நடுநிலைக்கும் சமரசம் காண முடிந்ததா?
திமுகவைப் பற்றிய விமர்சனங்களை நான் நிச்சயம் எதிர்கொள்வேன். திமுக ஓர் அரசியல் பண்பாட்டு இயக்கம். அதன் மீது கடுமையான விமர்சனங்கள் இருக்கும்; எழும். திராவிட இயக்கம் வேறு; கட்சி வேறு என்று கருதுபவன் நான். திமுக இரண்டறக் கலந்தது. நான் கொள்கை சமரசம் செய்துகொள்வதில்லை.

திமுக சாதித்தவை என்ன, தவறவிட்டவை என்ன?
சாதித்தவை ஏராளம். திமுக முற்றிலுமாக திராவிட இயக்கக் கொள்கைகளை நிறைவேற்றிவிட்டது என்று சொல்லிவிட மாட்டேன். ஆனால், அந்தக் கட்சி முடிந்தவரை சாதித்திருக்கிறது. நிறைவேற்றாத சாதனை களைத் தவறவிட்டவை என்று சொல்ல முடியாது. இனி எதிர்வரும் திமுகவின் ஆட்சிக் காலம் அதனை இட்டு நிரப்பும்.
 - நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/1AoEgD)

No comments:

Post a Comment